தமிழகத்தில் நடப்பு பருவத்தில் 31 லட்சம் டன் நெல் கொள்முதல் - அமைச்சர் காமராஜ் தகவல்


தமிழகத்தில் நடப்பு பருவத்தில் 31 லட்சம் டன் நெல் கொள்முதல் - அமைச்சர் காமராஜ் தகவல்
x
தினத்தந்தி 13 Sep 2020 10:15 PM GMT (Updated: 14 Sep 2020 1:48 AM GMT)

தமிழகத்தில் நடப்பு பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் இதுவரை 31 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர், 

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.6 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளை அமைச்சர் காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது கலெக்டர் ஆனந்த், கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக கட்டிட பணிகள் இன்னும் 3 மாதத்தில் முடிவடைந்து அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். திருவாரூர் மாவட்டத்தில் நேற்று வரை 4,975 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டபோதும், தற்போது 825 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 551 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகிறது. இந்த ஆண்டு நடப்பு பருவத்தில் இதுவரை 31 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டுதான் அதிகபட்ச கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என உறுதியான நிலைப்பாட்டில் உள்ளோம். ஆனால் நீட் தேர்வை எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவ-மாணவிகள் வாழ்க்கையில் போராடி வெற்றி பெற வேண்டுமே தவிர தவறான முடிவுகளை எடுக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story