மாவட்டத்தில் 3 மையங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்த ‘நீட்’ தேர்வு - 1,764 மாணவ-மாணவிகள் எழுதினர்


மாவட்டத்தில் 3 மையங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடந்த ‘நீட்’ தேர்வு - 1,764 மாணவ-மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 14 Sept 2020 3:45 AM IST (Updated: 14 Sept 2020 8:25 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் 3 மையங்களில் நடந்த ‘நீட்’ தேர்வை 1,764 மாணவ-மாணவிகள் எழுதினர்.

கரூர்,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு பல்வேறு கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த ஆண்டும் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு நேற்று நடத்தப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வுக்கு 3 மையங்கள் ஒதுக்கப்பட்டன. கரூர் கொங்குகலை அறிவியல் கல்லூரி, வெள்ளியணை வேலம்மாள் வித்யாலையா பள்ளி , க.பரமத்தி வி.எஸ்.பி. என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய 3 இடங்களில் ‘நீட்’ தேர்வு நடந்தது. கரூர் மாவட்டத்தில், 3 மையங்களிலும் மொத்தம் 2,103 பேர் தேர்வு எழுத அனுமதி பெற்று இருந்த நிலையில், 1,764 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுத அனுமதி பெற்றவர்களில் 339 பேர் தேர்வு எழுத வரவில்லை.

கடுமையான கட்டுப்பாடுகளுடன் இந்த தேர்வு நடந்தது. தேர்வு மையத்துக்குள் மாணவ-மாணவிகள், தேர்வு கண்காணிப்பு அதிகாரிகள் ஆகியோரை தவிர வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. மாணவ-மாணவிகள் கையில் கடிகாரம் அணிந்து செல்லவும், கழுத்தில் செயின் அணிந்து செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. மாணவிகள் கம்மல், மூக்குத்தி, வளையல் அணிந்து செல்லவும், தலை முடியை பின்னல் போட்டுச் செல்வதற்கும், சுடிதாருக்கு துப்பட்டா அணிந்து செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

மாணவ-மாணவிகள் குடிநீர் பாட்டில், சானிடைசர், ஹால்டிக்கெட், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியபொருட்களை மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாணவ-மாணவிகள் அனைவரும் முக கவசம் அணிந்தும், கையுறை அணிந்தும் வந்திருந்தனர்.

மேலும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் சோதனை செய்யப்பட்டது. மாணவ-மாணவிகள் முழுமையான சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணி வரை நடந்தது. தேர்வு மையங்களுக்கு வெளியே கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story