சேலம் அருகே, நீட் தேர்வு மையத்தில் காத்திருந்த பெற்றோர் கழிப்பிட வசதி இல்லாமல் அவதி - மகளுக்காக ராமஜெயம் எழுதிய தாய்


சேலம் அருகே, நீட் தேர்வு மையத்தில் காத்திருந்த பெற்றோர் கழிப்பிட வசதி இல்லாமல் அவதி - மகளுக்காக ராமஜெயம் எழுதிய தாய்
x
தினத்தந்தி 14 Sept 2020 10:30 AM IST (Updated: 14 Sept 2020 10:15 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே ‘நீட்‘ தேர்வு எழுதிய தனது மகளுக்காக தேர்வு முடியும் வரை பாசக்கார தாய் ஒருவர் ராமஜெயம் எழுதிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது. தேர்வுக்கு மாணவர்களை அழைத்து வந்திருந்த பெற்றோர் கழிப்பிட வசதி இல்லாமல் காத்திருந்ததால் அவதிக்குள்ளாகினர்.

வாழப்பாடி,

தமிழகம் முழுவதும் மருத்துவ படிப்பிற்கான ‘நீட்‘ தேர்வு நேற்று நடந்தது. இதையொட்டி மாணவ-மாணவிகள் காலை 11 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். உள்ளே சென்ற மாணவ-மாணவிகள் மாலை 5 மணிக்கு தேர்வு எழுதி முடித்து வெளியே வந்தனர்.

சுமார் 6 முதல் 7 மணி நேரம் தேர்வு அறைக்குள் இருந்த மாணவ-மாணவிகள் சோர்வுடன் வெளியே வந்ததை காண முடிந்தது. இந்தநிலையில் மாணவ-மாணவிகள் உடன் வந்த அவர்களது பெற்றோர், கழிப்பிட வசதியின்றி சாலையில் தவித்த காட்சியையும் பார்க்க முடிந்தது.

சேலம் அருகே ராமலிங்கபுரத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத சென்ற பின் அங்கிருந்த அனைத்து பெற்றோர்களும் ஆங்காங்கே அமர்ந்து தூங்கியும், மொபைலில் படம் பார்த்தும், சமூக ஊடகங்களில் பொழுதை கழித்தனர்.

நீட் தேர்வு நடந்த தனியார் கல்லூரி முன் நிறுத்தப்பட்ட காரில் அமர்ந்திருந்த தாய் ஒருவர் தனது மகள் தேர்வு எழுத தொடங்கிய பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை காரில் அமர்ந்து கொண்டு ஸ்ரீராமஜெயம் எழுதினார். இதை பார்த்த அங்கிருந்த மற்ற பெற்றோர்கள் அந்த பாசக்கார தாயை பாராட்டி சென்ற சம்பவம் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் கழிப்பிட வசதியின்றி சாலையில் தவித்த பெற்றோர் கூறியதாவது:-

வெகு தொலைவில் இருந்து கிட்டத்தட்ட 2,3 மாவட்டங்கள் தள்ளி சேலத்தில் உள்ள தேர்வு மையத்துக்கு நாங்கள் வந்திருக்கிறோம். ஆனால் அங்கிருந்து வந்த களைப்பு இல்லாமல் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து தேர்வு அறைக்குள் மாணவ-மாணவிகள் வைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் காலையில் சாப்பிட்ட உணவுடன் தேர்வு அறையில் இருந்த மாணவ, மாணவிகள் மதிய உணவு இல்லாமல் தேர்வு எழுதக் கூடிய நிலை ஏற்பட்டது. எனவே வரும் காலங்களில் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு உள்ளிட்ட வசதிகளை நீட் தேர்வு மையங்களில் அமைத்து தரவேண்டும். மேலும் மாணவர்களுடன் வரும் பெற்றோருக்காக கழிப்பிட வசதியும், ஓய்வறை வசதியும் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். தற்போது அந்த வசதியின்றி சாலையில் பரிதவிக்கின்றோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story