திண்டிவனத்தில் போலீஸ் அதிரடி: வீட்டில் பதுக்கிய ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - வாலிபர் கைது
திண்டிவனத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபர் ஒருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம்,
தமிழகத்தில் பான்பராக், பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. அரசின் உத்தரவை மீறி, திண்டிவனத்திலுள்ள பல்வேறு கடைகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக, புகார்கள் வந்தது. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில், திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் மற்றும் போலீசார் நேற்று திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வாலிபர் ஒருவர், சாக்குப்பையுடன் சந்தேகத்துக்கு இடமாக அந்த பகுதியில் நின்றிருந்தார். அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவர் வைத்திருந்த சாக்கு பையை வாங்கி சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. இவற்றை மூட்டையில் எடுத்து வந்து திண்டிவனம் பகுதியில் உள்ள கடைகளுக்கு அவர் சப்ளை செய்ய இருந்த நிலையில் போலீசில் சிக்கியது தெரியவந்தது. பின்னர், அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அவர், திண்டிவனம் கிடங்கல்-1 முத்துகிருஷ்ண முதலி தெருவை சேர்ந்த தனபால் மகன் அரிபிரசாத் (வயது 26) என்பதும், திண்டிவனம் பகுதியில் உள்ள கடைகளில், புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
தொடர்ந்து போலீசார் அவரது, வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75 கிலோ குட்கா, பான்பராக், பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிபிரசாத்தை கைது செய்தனர். மேலும் அவருக்கு எங்கிருந்து புகையிலை பொருட்கள் வந்தது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story