கொரோனா தொற்று அச்சத்துக்கு இடையே குமரியில் நீட் தேர்வை 3,311 பேர் எழுதினர் - கடும் கட்டுப்பாடுகளுடன் 6 மையங்களில் நடந்தது


கொரோனா தொற்று அச்சத்துக்கு இடையே குமரியில் நீட் தேர்வை 3,311 பேர் எழுதினர் - கடும் கட்டுப்பாடுகளுடன் 6 மையங்களில் நடந்தது
x
தினத்தந்தி 14 Sep 2020 6:15 AM GMT (Updated: 14 Sep 2020 6:15 AM GMT)

கொரோனா தொற்று அச்சத்துக்கு இடையே குமரி மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வை 3,311 பேர் எழுதினர். கடும் கட்டுப்பாடுகளுடன் 6 மையங்களில் நடந்தது.

நாகர்கோவில், 

மருத்துவ படிப்புகளில் சேர இந்திய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று நாடு முழுவதும் நடந்தது. குமரி மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு 6 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அதாவது நாகர்கோவில் சுங்கான்கடையில் உள்ள வின்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி, செயின்ட் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி, நாகர்கோவில் ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளி, இறச்சகுளம் மாதா அமிர்தானந்தமயி என்ஜினீயரிங் கல்லூரி, தோவாளை லயோலா என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் அஞ்சுகிராமம் ரோகிணி என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய 6 இடங்களில் நீட் தேர்வு நடந்தது.

சுங்கான்கடை வின்ஸ் என்ஜினீயரிங் கல்லூரியில் 900 பேரும், இறச்சகுளம் அமிர்தா என்ஜினீயரிங் கல்லூரியில் 900 பேரும், சுங்கான்கடை செயின்ட் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி, தோவாளை லயோலா என்ஜினீயரிங் கல்லூரி, அஞ்சுகிராமம் ரோகிணி என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய மையங்களில் தலா 600 பேர் வீதம் 1800 பேரும், நாகர்கோவில் ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் 349 பேரும் என மொத்தம் 3,949 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 638 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதைத் தொடர்ந்து 3 ஆயிரத்து 311 பேர் தேர்வு எழுதினர்.

தேர்வானது மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் கொரோனா தொற்று பரவலை தடுக்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதாவது மாணவ-மாணவிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையமானது அமைக்கப்பட்டு இருந்தது. அதோடு நீட் தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

காலை 11 மணியில் இருந்து ஒவ்வொரு அரை மணி நேர இடைவெளியில் மதியம் 1¼ மணி வரை தேர்வு மையத்துக்கு மாணவ-மாணவிகள் வர அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி மாணவ-மாணவிகள் காலை 11 மணிக்கு முன்னதாக தேர்வு மையம் முன் திரண்டனர். பின்னர் மாணவிகள் அணிந்து வந்த கம்மல், நகை, கொலுசு மற்றும் ஆபரணங்களை கழற்றி பெற்றோரிடம் கொடுத்தனர். சில மாணவிகள் தலைமுடியை சடை பின்னியபடி தேர்வு மையத்துக்குள் நுழைய முயன்றனர். ஆனால் சடை பின்னிய நிலையில் மாணவிகள் தேர்வு எழுத அனுமதி இல்லை என்பதால் மாணவிகள் தங்களது சடையை அவிழ்த்துவிட்டு தலைவிரி கோலத்துடன் தேர்வு மையத்துக்கு சென்றனர்.

இதே போல முழுக்கை சட்டை மற்றும் பெரிய பட்டன் கொண்ட சட்டைகள் அணிந்து வர தடைவிதிக்கப்பட்டு இருந்தது. ஷூ அணிந்து வர கட்டாய தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதுதெரியாமல் சில மாணவர்கள் ஷூ அணிந்து வந்தனர். பின்னர் அதை தேர்வு மையத்துக்கு வெளியே கழற்றி போட்டுவிட்டு சென்றனர். வாட்ச் அணியவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

அதன்பிறகு ஹால் டிக்கெட்டை காட்டிய பிறகு தேர்வு மையத்துக்குள் மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக வரிசையாக வட்டம் வரையப்பட்டு இருந்தது. அந்த வட்டத்தில் மாணவ-மாணவிகள் அணிவகுத்து நின்றனர். பின்னர் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சானிடைசரும் வழங்கப்பட்டது.

பின்னர் தேசிய தேர்வு முகமை சார்பில் வழங்கப்பட்ட முக கவசத்தை மாணவ- மாணவிகள் அணிந்தபடி தேர்வு அறைக்குள் சென்று தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அதோடு அனைத்து மாணவ - மாணவிகளும் கையுறை அணிந்திருந்தனர். பெரும்பாலானவர்கள் கையில் 50 மில்லி அளவு கொண்ட கிருமி நாசினி திரவம், வெளிப்படையான தண்ணீர் பாட்டில், தேர்வுக்கு தேவையான ஆவணங்களை கொண்டு சென்றனர்.

நாகர்கோவில் ஒழுகினசேரியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்துக்கு மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோருடன் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்திருந்தனர். அவர்கள் 11 மணிக்கு முன்னதாகவே வந்ததால் அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் சாலை ஓரம் காத்திருந்தனர். மாணவ-மாணவிகள் தேர்வு எழுத சென்ற பிறகு அவர்களது வருகைக்காக பெற்றோர் அங்கே காத்திருந்தனர். ஆனால் தேர்வு மையம் முன் ஏராளமானவர்கள் குவிந்ததால் சமூக இடைவெளி காற்றில் பறந்தது. அனைவரும் தேர்வுக்கான ஆயத்த பணிகளில் மும்முரமாக இருந்ததால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை.

அவ்வாறு கடைப்பிடிக்காதவர்களை போலீசார் எச்சரித்தனர். நீட் தேர்வையொட்டி ஒவ்வொரு தேர்வு மையங்கள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளுக்கு தேர்வு மையத்துக்குள் செல்லும் முன்பு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கி கூறினார்கள்.

தமிழகத்தில் ஒரே நாளில் நீட் தேர்வு அச்சத்தில் 3 மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் மற்றும் கொரோனா தொற்று அச்சத்துக்கு இடையே நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story