ஏரல் அருகே பெண் கொலை வழக்கில் 2 வாலிபர்கள் கைது - பரபரப்பு வாக்குமூலம்


ஏரல் அருகே பெண் கொலை வழக்கில் 2 வாலிபர்கள் கைது - பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 15 Sept 2020 4:00 AM IST (Updated: 14 Sept 2020 10:31 PM IST)
t-max-icont-min-icon

ஏரல் அருகே நடந்த பெண் கொலை வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஏரல்,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சம்படி கிராமம் மேல தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி செங்கமலம் (வயது 47). இவர் கடந்த 12-ந்தேதி காலையில் தனது வீட்டின் அருகில் உள்ள புதர் செடிகளுக்கு இடையே அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது ஆடைகளும் களையப்பட்ட நிலையில் இருந்தது.

இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிப்பதற்காக, ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதுதொடர்பாக, சம்படி காலனி தெருவைச் சேர்ந்த கணபதி மகன் ஆனந்த் (33), மாயாண்டி மகன் மகாராஜன் (23) ஆகிய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

கைதான ஆனந்த் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
நானும், மகாராஜனும் கூலி தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறோம். நாங்கள் 2 பேரும் ஒன்றாக வேலைக்கு சென்று வந்ததால், நண்பர்களாக பழகி வந்தோம். கடந்த 10-ந்தேதி இரவில் நானும், மகராஜனும் எங்களது ஊரில் ஒன்றாக அமர்ந்து மது குடித்தோம்.

பின்னர் நள்ளிரவில் செங்கமலத்தின் வீட்டுக்கு சென்று, அவரை கற்பழிக்க முயன்றோம். அப்போது செங்கமலம் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட முயன்றதால், அவரது வாயை பொத்தினோம். பின்னர் அங்கு கிடந்த செங்கற்களை எடுத்து செங்கமலத்தின் தலையில் பலமாக தாக்கினோம். இதில் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து செங்கமலத்தின் உடலை வீட்டின் பின்பக்கமாக தூக்கிச் சென்று, அங்குள்ள புதர் செடிகளுக்கு இடையே வீசிச் சென்றோம். பின்னர் நான் வீட்டுக்கு சென்று விட்டேன். யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு உள்ளூரிலேயே இருந்தேன்.

ஆனால், மகாராஜன் சென்னை கோயம்பேட்டுக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் நேற்று முன்தினம் அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்தார். இதற்கிடையே, கொலை நடந்த இடத்தில் கிடந்த தடயங்களின் மூலம் நாங்கள்தான் கொலை செய்தோம் என்று போலீசார் தெரிந்து கொண்டனர்.

தொடர்ந்து ஏரல் அருகே இடையற்காடு பகுதியில் நானும், மகாராஜனும் பதுங்கி இருந்தபோது, போலீசார் எங்களை கைது செய்தனர்.

இவ்வாறு ஆனந்த் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கைதான ஆனந்த், மகாராஜன் ஆகிய 2 பேரையும் போலீசார் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Next Story