கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி பலி


கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 15 Sept 2020 3:19 AM IST (Updated: 15 Sept 2020 3:19 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டலில் உள்ள கழிவுநீர் தொட்டியை உள்ளே இறங்கி சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

பூந்தமல்லி, 


சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனி (வயது 32). இவர், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம், வழுதலம்பேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஓட்டலில் உள்ள கழிவுநீர் தொட்டியில் தேங்கியுள்ள கழிவுநீரை வாகனம் வைத்து அகற்றப்பட்டது.

மேலும் தொட்டிக்கு அடியில் உள்ள சகதியை அகற்றுவதற்காக பழனியை ஏணியை போட்டு உள்ளே இறக்கி உள்ளனர். அவர் தொட்டிக்குள் இறங்கி கழிவுகளை அகற்றும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். மேலே இருப்பவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை.

விஷவாயு தாக்கி பலி

இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து கொண்டு கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி மயங்கி கிடந்த பழனியை மீட்டனர்.

ஆனால் அதற்குள் அவர், கழிவுநீர் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி பரிதாபமாக இறந்துவிட்டார். குன்றத்தூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் உரிமையாளரிடம் விசாரித்து வருகின்றனர்.


Next Story