சொந்த மாநிலம் திரும்பினார்: “கனத்த இதயத்துடன் மும்பையில் இருந்து புறப்படுகிறேன்” நடிகை கங்கனா ரணாவத் உருக்கம்


சொந்த மாநிலம் திரும்பினார்: “கனத்த இதயத்துடன் மும்பையில் இருந்து புறப்படுகிறேன்” நடிகை கங்கனா ரணாவத் உருக்கம்
x
தினத்தந்தி 15 Sept 2020 5:04 AM IST (Updated: 15 Sept 2020 5:04 AM IST)
t-max-icont-min-icon

“கனத்த இதயத்துடன் மும்பையில் இருந்து புறப்படுகிறேன்” என நடிகை கங்கனா ரணாவத் டுவிட்டரில் உருக்கமாக கூறியுள்ளார்.

மும்பை,

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக நடிகை கங்கனா ரணாவத் மும்பை போலீசாரையும், மாநில அரசையும் கடுமையாக விமர்சித்தார். இதில் அவர் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கும், மாநிலத்தை ஆளும் சிவசேனாவுக்கும் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து மத்திய அரசு அவருக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பை வழங்கியது. இந்தநிலையில் கடந்த வாரம் அவர் மும்பை வந்தார். அன்று பாந்திராவில் உள்ள நடிகையின் பங்களாவில் சட்டவிரோத புதுப்பிப்பு பணி நடந்ததாக கூறி அதை மாநகராட்சி இடித்து தள்ளியது. இதனால் கங்கனாவுக்கும், சிவசேனாவுக்கும் மோதல் முற்றியது. அவர் டுவிட்டரில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை கடுமையாக விமர்சித்தார்.

மேலும் அவர் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கூறி கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

இந்தநிலையில் நடிகை கங்கனா நேற்று மும்பையில் இருந்து சொந்த ஊரான இமாசல பிரதேச மாநிலத்தில் உள்ள மணாலிக்கு புறப்பட்டு சென்றார். புறப்படும் முன் அவர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது:-

கனத்த இதயத்துடன் மும்பையில் இருந்து புறப்படுகிறேன். கடந்த சில நாட்களாக என் மீது நடந்த தாக்குதல்கள், எனது வீடு மற்றும் அலுவலகத்தை இடிக்க நடந்த முயற்சி என என்னை அச்சுறுத்திய விதம், என்னை சுற்றியிருந்த துடிப்பான ஆயுதம் ஏந்திய காவலர்களால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் நான் ஒப்பிட்டு கூறியது உறுதியாகி உள்ளது.

பாதுகாக்க வேண்டியவர்கள், அவர்களை அழிப்பவர்களாக அறிவித்து உள்ளனர். அவர்கள் ஜனநாயகத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். நான் பலவீனமானவள் என அவர்கள் தவறாக நினைத்தனர். பெண்ணை அச்சுறுத்தியும், அவதூறு செய்தும் அவர்களின் பெயரை கெடுத்தும் கொண்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story