கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியது தொற்று பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது


கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியது தொற்று பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 14 Sep 2020 11:53 PM GMT (Updated: 14 Sep 2020 11:53 PM GMT)

புதுவையில் ஒரு லட்சம் பேருக்கு மேல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியது.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 742 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 414 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. ஒரே நாளில் 447 பேர் குணமடைந்துள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதாவது, கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற ரெயின்போ நகரை சேர்ந்த 80 வயது மூதாட்டி, அரியாங்குப்பம் ஆர்.கே.நகரை சேர்ந்த 63 வயது மூதாட்டி, வில்லியனூர் கிழக்கு தேரோடும் வீதியை சேர்ந்த 56 வயது ஆண் ஆகியோரும், ஜிப்மரில் புதுவை அன்னை தெரசா நகர் முல்லை வீதியை சேர்ந்த 59 வயது ஆண், கதிர்காமம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த 74 வயது மூதாட்டி, லாஸ்பேட்டை காமராஜ் வீதியை சேர்ந்த 47 வயது ஆண், வில்லியனூர் வீரவாஞ்சி வீதியை சேர்ந்த 65 வயது முதியவர் ஆகியோரும் தனியார் ஆஸ்பத்திரியில் சித்தன்குடியை சேர்ந்த 52 வயது ஆணும், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் 75 வயது மூதாட்டியும் உயிரிழந்தனர்.

புதுவை மாநிலத்தில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. அதாவது இதுவரை ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 743 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் 80 ஆயிரத்து 424 பேருக்கு தொற்று இல்லை. 20 ஆயிரத்து 226 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அவர்களில் 4 ஆயிரத்து 805 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 1,721 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 3 ஆயிரத்து 84 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 15 ஆயிரத்து 27 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா உயிரிழந்தோர் எண்ணிக்கை 394 ஆக உயர்ந்துள்ளது. அதாவது புதுச்சேரியில் 339 பேரும், காரைக்காலில் 21 பேரும், ஏனாமில் 34 பேரும் இறந்துள்ளனர். புதுவையில் இறப்பு விகிதம் 1.95 சதவீதமாகவும், குணமடைவது 74.30 சதவீதமாகவும் உள்ளது.

மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story