மனுக்கொடுக்க மூதாட்டிகளை திரட்டி வந்த சமூக சேவகருக்கு கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை - 3 பேர் மீது வழக்கு பதிவு


மனுக்கொடுக்க மூதாட்டிகளை திரட்டி வந்த சமூக சேவகருக்கு கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை - 3 பேர் மீது வழக்கு பதிவு
x
தினத்தந்தி 15 Sep 2020 12:17 AM GMT (Updated: 15 Sep 2020 12:17 AM GMT)

மனுக்கள் கொடுக்க மூதாட்டிகளை திரட்டி வந்த சமூக சேவகருக்கு கலெக்டர் சி.கதிரவன் எச்சரிக்கை விடுத்ததுடன், 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யவும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

ஈரோடு,

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்து வந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று, அவர்களுக்கு விரைவான தீர்வுகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பது வழக்கம்.

எனவே திங்கட்கிழமைகளில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து மனுக்கள் கொடுப்பார்கள்.

கொரோனா பரவல் காரணமாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து தீர்வு பெறும் பொருட்டு, திங்கட்கிழமைகளில் மனுக்கள் போடுவதற்காக ஒரு மனு பெட்டி கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அந்த பெட்டியில் பொதுமக்கள் தங்களுடைய மனுக்களை போட்டு வந்தனர்.

நேற்று திங்கட்கிழமை என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் போடும் பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் பெருந்துறை கருக்குபாளையம் பொன்னாங்காட்டு வலசு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆண்களும், பெண்களும் 40 பேர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கும்பலாக வந்ததால், கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. எனவே அனைவரும் கலெக்டர் சந்தித்து முறையிடும் எண்ணத்தில் கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே சம்பத் நகர் ரோட்டை ஒட்டி கும்பலாக நின்று கொண்டிருந்தனர்.

அப்போது முகாம் அலுவலகத்தில் இருந்து, கலெக்டர் அலுவலகம் நோக்கி கலெக்டர் சி.கதிரவனின் கார் வந்தது. கும்பலாக மூதாட்டிகள் உள்பட பொதுமக்கள் கூடி நிற்பதை பார்த்து காரை நிறுத்தச்சொல்லி கலெக்டர் சி.கதிரவன் வெளியே வந்தார்.

அவர் மக்களிடம் விசாரித்தபோது பொன்னாங்காட்டு வலசு காலனியில் குடியிருக்கும் பொதுமக்கள் 40 பேருக்கு வீட்டுமனைப்பட்டா கேட்டும், அந்த பகுதிகளில் தெருவிளக்கு வசதி, பஸ்வசதி, கழிப்பிடம் மற்றும் சமுதாயக்கூட வசதிகள் கேட்டு மனு கொடுக்க வந்ததாகவும், அவர்களை சமூக சேவகரான சின்னச்சாமி என்பவர் அழைத்து வந்ததும் தெரியவந்தது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நேரத்தில் பொதுமக்களை குறிப்பாக மூதாட்டிகளை அழைத்து வந்த சின்னச்சாமியை கலெக்டர் சி.கதிரவன் கடுமையாக எச்சரித்தார். சமூக இடைவெளி இல்லாமலும், முகக்கவசம் இன்றியும் பாதுகாப்பற்ற நிலையில் பொதுமக்களை திரட்டி வந்த சின்னசாமி உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யவும் போலீசாருக்கு கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார். பின்னர் 3 பேர் மட்டும் சென்று கோரிக்கை மனுக்களை வழங்க அறிவுரை வழங்கினார்.

மேலும் அவர் கூறுகையில், ‘கொரோனா பரவல் இருப்பதால் பொதுமக்கள் கும்பலாக எங்கும் செல்லவேண்டாம். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமின்றி கொரோனா காலத்தில் பொதுமக்களை பாதுகாப்பற்ற முறையில் கும்பலாக கூட்டி சேர்ப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னாள் முதல் -அமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, கோவை உள்ளிட்ட சிறைகளில் உள்ள பயங்கரவாதிகள், குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களை விடுதலை செய்வதை கைவிட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுக்கப்பட்டது.


Next Story