நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி விழுப்புரத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் 100 பேர் கைது


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி விழுப்புரத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் 100 பேர் கைது
x
தினத்தந்தி 15 Sept 2020 8:32 AM IST (Updated: 15 Sept 2020 8:32 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தடையை மீறி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. கூட்டணி கட்சியினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம்,

பிரதமரின் கிசான் சம்மன் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் கலெக்டர் அலுவலம் முன்பு தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஊரடங்கு காரணமாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் தடையை மீறி தி.மு.க. கூட்டணி கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் , துணைச் செயலாளர்கள் ஜெயச்சந்திரன், புஷ்பராஜ், மைதிலி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் சீனுவாசக்குமார், ரமேஷ் ஆகியோர் வரவேற்றனர்.

கைது

அப்போது முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி தி.மு.க. கூட்டணி கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். இதில் இந்திய முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டசெயலாளர் ஏ.வி.சரவணன், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் குலாம் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாமரன், ஆற்றலரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Next Story