கிறிஸ்தவ ஆலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் குவிப்பு


கிறிஸ்தவ ஆலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் குவிப்பு
x

வத்தலக்குண்டு அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வத்தலக்குண்டு,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே மேலக்கோவில்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு முன்னாள் ராணுவவீரர்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில், புனித சவேரியார் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. நேற்று இரவு 8¼ மணிக்கு இந்த ஆலயத்தில் பிரார்த்தனை நடந்து கொண்டு இருந்தது. அப்போது, ஆலய சுவரில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பியோடி விட்டனர். இந்த சத்தம் கேட்டு பிரார்த்தனையில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து வெளியே ஓடி வந்து பார்த்தனர். அப்போது சுவரில் பெட்ரோல் குண்டு வீசியதற்கான அடையாளமாக கருப்பு நிறத்தில் புகை படர்ந்திருந்தது. மேலும் அங்கு பாட்டில், அதன் மூடி, திரி ஆகியவை கிடந்தன.

போலீசார் குவிப்பு

இது குறித்து வத்தலக்குண்டு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். திண்டுக்கல்லில் இருந்து மோப்பநாய் ரீமா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மேலும் கிறிஸ்தவ ஆலயத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீயாக பரவியது.

இதனால் ஏராளமான பொதுமக்கள் ஆலயம் முன்பு குவிந்தனர். அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிறிஸ்தவ ஆலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர் களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story