தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி நூதன போராட்டம்


தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி நூதன போராட்டம்
x
தினத்தந்தி 15 Sept 2020 9:07 AM IST (Updated: 15 Sept 2020 9:07 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி,

தமிழகம் முழுவதும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த சங்கங்களின் நிர்வாகிகள் தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு நேற்று காலை திரண்டனர். அங்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரேம்குமார் பிணம்போல் வேடமிட்டார். அவரை அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் வரை பாடைகட்டி ஊர்வலமாக தூக்கி வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் அருகில் வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால், போலீசாருக்கும், ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பிணம் போல் வேடமிட்ட நபரை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் படுக்க வைத்து, மற்றவர்கள் தரையில் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முனீஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் சவுந்தரபாண்டியன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பரபரப்பு

பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, சாலையோரம் நின்று ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டம் முடிந்த பின்னர், நிர்வாகிகள் சிலரை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதையடுத்து போலீசாரை கண்டித்து மீண்டும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் கைது நடவடிக்கையை கைவிட்டதால், போராட்டத்தை முடித்துக்கொண்டு போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story