போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ஷர்மிளா மந்த்ரேவுக்கு தொடர்பா? பரபரப்பு தகவல்கள்


போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ஷர்மிளா மந்த்ரேவுக்கு தொடர்பா? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 15 Sep 2020 11:15 PM GMT (Updated: 15 Sep 2020 9:33 PM GMT)

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ஷர்மிளா மந்த்ரேவுக்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு,

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதற்கிடையே கன்னட திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு இருப்பதாக இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் குற்றச்சாட்டு கூறி இருந்தார். மேலும் அவர் கன்னட திரைஉலகில் போதைப்பொருட்களை பயன்படுத்தும் 9 நடிகைகள், 6 நடிகர்களின் பெயர்களையும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் கூறியதாக தகவல்கள் வெளியானது.

மேலும் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி கன்னட நடிகை அன்ட்ரிதா ராய், அவரது கணவரும், நடிகருமான திகந்த் ஆகியோருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் போதைப்பொருள் விவகாரத்தில் மேலும் ஒரு நடிகைக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது கன்னட திரைஉலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஷர்மிளா மந்த்ரே(வயது 30). இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த கடந்த ஏப்ரல் மாதம் 4-ந் தேதி அதிகாலை 2.30 மணியளவில் நடிகை ஷர்மிளா மந்த்ரேவின் கார் பெங்களூரு வசந்த்நகர் பகுதியில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் விபத்தில் சிக்கி இருந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த நடிகை ஷர்மிளா மந்த்ரே உள்ளிட்ட சிலர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து ஹைகிரவுண்ட் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நடிகை ஷர்மிளா மந்த்ரே குடிபோதையில் இருந்ததாகவும், அவர் தான் காரை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த நடிகை ஷர்மிளா மந்த்ரே, எனக்கு வயிற்று வலி அதிகமாக இருந்தது. இதனால் எனது நண்பர்களுடன் மருந்து வாங்க மருந்தகத்திற்கு சென்றேன். அப்போது கார் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கிவிட்டது என்று கூறி இருந்தார்.

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கு தொடர்பாக பெங்களூரு கோர்ட்டில், ஹைகிரவுண்ட் போக்குவரத்து போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் நடிகை ஷர்மிளா மந்த்ரே குற்றமற்றவர் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் போதைப்பொருள் விவகாரத்தில் 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ள முன்னாள் மந்திரி ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வாவும், நடிகை ஷர்மிளா மந்த்ரேவும் நெருங்கிய நண்பர்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஷர்மிளா மந்த்ரேவின் கார் விபத்தில் சிக்கிய அன்று ஆதித்யா ஆல்வா நடத்திய விருந்து நிகழ்ச்சியில் ஷர்மிளா மந்த்ரே கலந்து கொண்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது கடந்த ஏப்ரல் 4-ந் தேதி இரவு ஆதித்யா ஆல்வா பெங்களூரு ஹெப்பாலில் உள்ள தனது வீட்டில் வைத்து இரவு விருந்து நிகழ்ச்சியை நடத்தி உள்ளார். இதில் நடிகை ஷர்மிளா மந்த்ரே, அவரது நண்பர் லோகேஷ் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு உள்ளனர். விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் அன்றைய தினம் அதிகாலை நேரத்தில் வசந்த்நகரில் உள்ள வீட்டிற்கு ஷர்மிளா மந்த்ரேவும், லோகேசும் காரில் வந்து உள்ளனர். அப்போது தான் கார் விபத்தில் சிக்கி உள்ளது.

ஆனால் போலீஸ் விசாரணையின் போது மருந்தகத்திற்கு சென்று மருந்து வாங்கி வந்ததாக ஷர்மிளா மந்த்ரே கூறியுள்ளார். மேலும் காரை டிரைவர் டான் தாமஸ் ஓட்டினார் என்றும் ஷர்மிளா மந்த்ரே கூறி இருந்தார். ஆனால் அவர் காரை ஓட்டவில்லை என்றும், அவர் பொய் சாட்சி கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஷர்மிளா மந்த்ரேவும், ஆதித்யா ஆல்வாவும் நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படுவதால் ஷர்மிளா மந்த்ரே போதைப்பொருட்களை பயன்படுத்தியதாகவும், அவருக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு உள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அவரிடமும் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

நடிகை ஷர்மிளா மந்த்ரே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story