போதைப்பொருள் வழக்கில் 6-வது குற்றவாளி: முன்னாள் மந்திரியின் மகன் ஆதித்யா ஆல்வா வீட்டில் அதிரடி சோதனை - கொரோனா காலத்திலும் விருந்து நிகழ்ச்சிகள் நடத்தியது அம்பலம்


போதைப்பொருள் வழக்கில் 6-வது குற்றவாளி: முன்னாள் மந்திரியின் மகன் ஆதித்யா ஆல்வா வீட்டில் அதிரடி சோதனை - கொரோனா காலத்திலும் விருந்து நிகழ்ச்சிகள் நடத்தியது அம்பலம்
x
தினத்தந்தி 16 Sept 2020 5:30 AM IST (Updated: 16 Sept 2020 3:21 AM IST)
t-max-icont-min-icon

போதைப்பொருள் வழக்கில் 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ள முன்னாள் மந்திரி ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வாவின் பண்ணை வீட்டில் நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். கொரோனா காலத்திலும் ஆதித்யா ஆல்வா தனது வீட்டில் நடிகர்-நடிகைகள், பிரமுகர்கள் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு,

போதைப்பொருள் விவகாரம் கன்னட திரை உலகை அதிர வைத்துள்ளது.
போதைப்பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, இவர்களது நண்பர்கள் ரவிசங்கர், ராகுல், போதைப்பொருள் விற்பனையாளர்கள் வீரேன் கண்ணா, பிரசாந்த் ரங்கா, பெங்களூரு நகை வியாபாரி வைபவ் ஜெயின், நயாஸ், தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த லோயம் பெப்பர் சம்பா, ஆதித்யா அகர்வால், பிரதிக் ஷெட்டி ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

மேலும் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, முன்னாள் மந்திரி ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா உள்பட 14 பேர் மீது காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் 6-வது குற்றவாளியாக ஆதித்யா ஆல்வா சேர்க்கப்பட்டு உள்ளார்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆதித்யா ஆல்வா, சேக் பாசில் உள்ளிட்டோரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் ஆதித்யா ஆல்வாவின் வீட்டில் சோதனை நடத்துவதற்கு கோர்ட்டில் போலீசார் அனுமதியும் பெற்று இருந்தனர். இந்த நிலையில் நேற்று பெங்களூரு ஹெப்பால் மரியனபாளையா எம்.எம்.ரெட்டி ரோட்டில் உள்ள ஆதித்யா ஆல்வாவுக்கு சொந்தமான ஹவுஸ் ஆப் லைப் என்ற வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அஞ்சுமாலா, புனித், ஹரீஷ் தலைமையிலான போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். ஆதித்யா ஆல்வா வீட்டில் சோதனை நடந்தபோது அங்கு யாரும் இல்லை. அந்த வீட்டில் உள்ள அறைகளில் போலீசார் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினார்கள். அப்போது வீட்டில் இருந்து 2 மடிக்கணினிகள் மற்றும் ஒரு கம்ப்யூட்டர் உள்பட சில முக்கிய ஆவணங்களை போலீசார் எடுத்து சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆதித்யா ஆல்வாவின் வீடு 4 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மேலும் 10 ஆயிரம் சதுரஅடியில் ஏரியையொட்டி அந்த வீடு அமைந்து உள்ளது. அந்த வீட்டில் வைத்து இரவு நேரங்களில் ஆதித்யா ஆல்வா விருந்து நிகழ்ச்சிகளை நடத்தி வந்து உள்ளார். இதில் நடிகர்கள், நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு உள்ளார்கள். மேலும் அந்த வீட்டில் வைத்து பேஷன் ஷோ, சினிமா படப்பிடிப்பும் நடந்து உள்ளது. 4 ஏக்கர் பரப்பளவில் வீடு அமைந்து உள்ளதால் அங்கு இரவு நேரங்களில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெறுவது அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தெரியாமல் இருந்து வந்து உள்ளது. பெரும்பாலும் இந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டினர், சாப்ட்வேர் என்ஜினீயர்கள் தான் கலந்து கொண்டு வந்தனர்.

மேலும் கொரோனா ஊரடங்கு நேரத்திலும் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக ஆதித்யா ஆல்வா விருந்து நிகழ்ச்சிகளை நடத்தி வந்ததும் தெரியவந்து உள்ளது. இதற்கிடையே தலைமறைவாக உள்ள ஆதித்யா ஆல்வா வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆதித்யா ஆல்வா வீட்டில் சோதனை நடத்தி கொண்டு இருந்தபோது, ஆதித்யா ஆல்வா வீட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகளும் வந்து விசாரித்தனர். அதாவது ஆதித்யா ஆல்வா தனது வீட்டை ரெசார்ட்டாக மாற்றி உள்ளார். இதற்கு கிரண் கார்த்திக் என்பவர் பெயரில் உரிமம் பெற்று உள்ளார்.

அந்த ரெசார்ட்டின் உரிமம் கடந்த 2018-ம் ஆண்டு முடிந்த நிலையில், உரிமத்தை புதுப்பிக்கவில்லை என்று தெரிகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளும் விசாரித்து விட்டு சென்றனர்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் கைதாகி உள்ள வீரேன் கண்ணா, நடிகை சஞ்சனா கல்ராணி ஆகியோர் சட்டவிரோதமாக சொத்து குவித்து உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதாவது வீரேன் கண்ணாவின் குடும்பத்தினருக்கு 13 நாடுகளில் சொத்துகளும், வீரேன் கண்ணாவுக்கு சொந்தமாக மராட்டிய மாநிலம் புனேயில் ஒரு பண்ணை வீடும், டெல்லி, மும்பை, பெங்களூருவில் தலா ஒரு பிளாட்டும், 5 சொகுசு கார்களும் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுபோல சஞ்சனாவுக்கு சொந்தமாக எலகங்கா, ஐதராபாத்தில் இடமும், சென்னையில் ஒரு பிளாட்டும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அவர்கள் விளம்பர நிறுவனத்தில் முதலீடு செய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சட்டவிரோதமாக சொத்து சேர்த்தது குறித்து வருமான வரித்துறையினர் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். இது சஞ்சனா, வீரேன் கண்ணாவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story