நகையை பறித்த வாலிபருடன் துணிச்சலுடன் போராடிய பெண் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளி மடக்கி பிடித்தார்


நகையை பறித்த வாலிபருடன் துணிச்சலுடன் போராடிய பெண் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளி மடக்கி பிடித்தார்
x
தினத்தந்தி 16 Sept 2020 7:44 AM IST (Updated: 16 Sept 2020 7:44 AM IST)
t-max-icont-min-icon

இரவிபுதூர்கடை அருகே பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறித்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்ற போது பாதிக்கப்பட்ட பெண்ணே இழுத்து கீழே தள்ளி போலீசில் ஒப்படைத்தார்.

பத்மநாபபுரம்,

இரவிபுதூர்கடை அருகே குருவிளைகாடு பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 50). இவர் நேற்று அந்த பகுதியில் சாலையோரமாக ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் வந்தனர். அவர்கள் செல்வியை நெருங்கிய நிலையில் வாகனத்தை ஓட்டினர். திடீரென பின்னால் இருந்த வாலிபர் செல்வியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த செல்வி ‘திருடன்... திருடன்...’ என சத்தம் போட்ட நிலையில் வாலிபரின் கையை பாய்ந்து பிடித்தார். அப்போது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் வாகனத்தை வேகமாக ஓட்ட முயன்றார். ஆனால் செல்வி, பின்னால் இருந்த வாலிபரின் கையை விடாமல் பலமாக இழுத்தார். இதில் வாலிபர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

போலீசில் ஒப்படைப்பு

இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் கீழே விழுந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை சரியாக கவனித்து அவரது கையில் இருந்த நகையை மீட்டனர். இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் சென்றவர் சிறிது தூரம் சென்றுவிட்டு தனது கூட்டாளியை மீட்க திரும்ப வந்தார். அப்போது அவர் பொதுமக்கள் கையில் சிக்கியிருப்பதை கண்டு வேகமாக தப்பி சென்றார்.

இதுகுறித்து பொதுமக்கள் தக்கலை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்த ஜிஜின் (வயது 21) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து ஜிஜினை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இவருக்கு மேலும் பல வழிப்பறி வழக்குகளில் தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story