பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்த கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்த கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 16 Sep 2020 2:30 AM GMT (Updated: 16 Sep 2020 2:30 AM GMT)

பாப்பாரப்பட்டியில் பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்த கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாப்பாரப்பட்டி,

கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரை பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டத்திற்கு விளைநிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த குழாய் பதிக்கும் திட்டத்தை விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லாமல் சாலையோரமாக செயல்படுத்த கோரி விவசாயிகள் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் பாப்பாரப்பட்டி பழைய பஸ் நிலையம் அருகில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டமைப்பு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் ரவீந்திரன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அர்ச்சுனன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மல்லையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் தர்மபுரி கிழக்கு மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் டி.கே.ராஜேந்திரன், அரூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், பென்னாகரம் ஒன்றிய செயலாளர் சாம்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பேச்சுவார்த்தை

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மேகலா, தாசில்தார் சேதுலிங்கம், பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்ட பொறியாளர் பிரவீன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாய நிலங்கள் வழியாக குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு சாலையோரம் பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். முன்னறிவிப்பு இன்றி விளைநிலங்களில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறாது எனவும், கோரிக்கைகளை அரசிடம் பரிந்துரைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் மற்றும் கூட்டமைப்பினர் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இந்த போராட்டத்தில் விவசாயிகள் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story