கொரோனாவால் துப்புரவு பெண் ஊழியர் பலி: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் - சக ஊழியர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்


கொரோனாவால் துப்புரவு பெண் ஊழியர் பலி: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் - சக ஊழியர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்
x
தினத்தந்தி 16 Sept 2020 3:00 PM IST (Updated: 16 Sept 2020 3:01 PM IST)
t-max-icont-min-icon

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இறந்த துப்புரவு பணியாளரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சக ஊழியர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அடுக்கம்பாறை,

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் 510 படுக்கைகள் உள்ளது. 285 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று முன்தினம் வென்டிலேட்டரில்சிகிச்சை பெற்று வந்த வேலூர் மூஞ்சூர்பட்டை சேர்ந்த கலைச்செல்வி (வயது 42), திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் பகுதியை சேர்ந்த ஜெயமுருகன் ஆகியோர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். சுமார் 1 மணி நேரம் ஆக்சிஜன் வராததால் அவர்கள் இறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், சப்-கலெக்டர் கணேஷ், சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து, 2 பேரின் இறப்புக்கான காரணம் குறித்து மருத்துவக் கல்லூரி டீன் செல்வி உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் கூறுகையில் ஆக்சிஜன் குறைபாட்டால் இருவரும் இறக்கவில்லை என்று தெரிவித்தார்.

கலைச்செல்வி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துமனையில் ஒப்பந்த முறையில் துப்புரவு பணியாளராக வேலை செய்துவந்தார். இதனால் அவர் இறந்த தகவலை கேட்ட, சக ஊழியர்கள் 5 பேர் நேற்று முன்தினம் இரவே மயங்கி விழுந்தனர். அவர்களுக்கும் அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று கலைச்செல்வி கொரோனாவால் இறந்ததை அதிகாரிகள் மறைக்கின்றனர். கொரோனா பாசிட்டிவ் என சான்று வழங்கினால் தான் உடலை வாங்குவோம் என கூறி, அவருடைய உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் வேலை செய்யும் துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்கள், கலைச்செல்வி இறந்து போனதற்கான காரணம் தெரிய வேண்டும். மேலும் ஒப்பந்த முறையில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதோடு, அரசு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மருத்துவமனை டீன் அலுவலகத்தை முற்றுகையிட்டு, அலுவலகம்முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் துப்புரவு பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் முயற்சி செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மருத்துவமனை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தும்வரை, போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனக்கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க 20-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

தகவலறிந்த வேலூர் சப்-கலெக்டர் கணேஷ், மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜவேலு, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ், உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இறந்துபோன துப்புரவு பணியாளர் கலைச்செல்வி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர் மாரடைப்பு ஏற்பட்டு பலியானார். அத்துடன் அவர் ஒப்பந்த பணியாளர்தான், அரசு ஊழியரில்லை. எனவே நீங்கள் நிவாரணம் கேட்க வேண்டுமென்றால் ஒப்பந்ததாரரைதான் கேட்க வேண்டுமென சப்-கலெக்டர் கணேஷ் கூறினார்.

மேலும் கலைச்செல்விக்கு கொரோனா பாசிட்டிவ் இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சான்று வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story