ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்களை கண்காணிக்க 98 அதிகாரிகள் நியமனம் - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை கண்காணித்து அபராதம் விதிக்க 98 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ராணிப்பேட்டை,
தமிழக அரசு கொரோனா பரவாமல் தடுக்கும் நோக்கில், அரசின் கட்டுப்பாடுகளை மீறும் பொதுமக்களிடமும், நிறுவனங்களிடமும் அபராதம் விதிக்க சட்டம் இயற்றி உள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கட்டுப்பாடுகளை மீறுவோர்களை கண்காணித்து அபராதம் விதிக்க வருவாய்த்துறையை சேர்ந்த 18 வருவாய் ஆய்வாளர்கள், பொது சுகாதாரத்துறையை சேர்ந்த 26 சுகாதார ஆய்வாளர்கள், காவல்துறையை சேர்ந்த 36 சப்-இன்ஸ்பெக்டர்கள், நகராட்சியை சேர்ந்த 9 துப்புரவு ஆய்வாளர்கள், 9 பேரூராட்சி செயல் அலுவலர்கள் என 98 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை மீறுதலுக்கு ரூ.500, முககவசம் அணியாவிட்டால் ரூ.200, பொது இடத்தில் எச்சில் துப்புதல், பொது இடத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் இருத்தலுக்கு ரூ.500, முடிவெட்டும் நிலையங்கள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள், வணிக நிறுவனங்கள், பிற இதர பொது இடங்களில் அரசு விதித்திருக்கும் நிலையான நடைமுறைகளை பின்பற்றாமல் இருத்தலுக்கு ரூ.5 ஆயிரம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தில் கட்டுப்பாட்டு விதிகளை மீறும் தனி நபருக்கு ரூ.500, வாகனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை, அரக்கோணம் சப்-கலெக்டர்கள் அவர்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் உரிய தடுப்பு நடவடிக்கைகளுடனும், வணிக நிறுவனங்கள் உரிய கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி செயல்படுவதையும், அரசின் அபராதங்கள் முறையாக விதிக்கப்படுவதையும் உறுதிப்படுத்திட நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story