மாவட்ட செய்திகள்

விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைப்பதை எதிர்த்து - விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் + "||" + Through farmland Opposing the construction of a gas pipeline - Farmers wait struggle

விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைப்பதை எதிர்த்து - விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைப்பதை எதிர்த்து - விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அதிகாரிகளின் சமரசப் பேச்சு வார்த்தையால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
பொங்கலூர்,

தமிழகத்தில் கோவை முதல் கர்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின்சார்பில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். 80 மீட்டர் அகலத்திற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

எனவே விவசாயிகள் இந்த திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். கருப்புக் கொடி போராட்டம், முற்றுகைப் போராட்டம் என பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனாலும் இந்த திட்டத்திற்கான அதிகாரிகள் நிலம் கையகப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த திட்டத்தை கேரளா மற்றும் கர்நாடகாவில் சாலையோரம் செயல்படுத்துவதை போல தமிழகத்திலும் செயல்படுத்தவேண்டும். நிலம் கையகப்படுத்தும் பணியை உடனடியாக நிறுத்தி சட்டமன்றத்தில் மாற்று வழியில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பொங்கலூர் அருகே கண்டியங்கோயில் ஊராட்சிக்குட்பட்ட கருங்காளிபாளையத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் நேற்று ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் வரவேற்று பேசினார். தொடர் போராட்டத்தை பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் குமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பி.ஏ.பி. பகிர்மான குழு தலைவர் கோபால், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் உள்பட பலர் திட்டத்தின் பாதிப்பு குறித்து விளக்கிப் பேசினார்கள்.

இந்த நிலையில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு திருப்பூர் ஆர்.டி.ஓ. கவிதா நேரடியாக வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விவசாயிகளின் கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு தெரிவிப்பதாகவும், அரசின் அறிவிப்பு வரும் வரை நிலம் கையகப்படுத்தும் பணியை நிறுத்தி வைப்பதாகவும், வரும் 23-ம் தேதி காங்கேயத்தில் விவசாயிகள் நேரடியாக அழைத்து விசாரணை நடத்தும் நிகழ்ச்சியை ஒத்தி வைப்பதாகவும் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் தொடர் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.

இந்த தொடர் போராட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சியின் மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.