அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை தே.மு.தி.க. வரவேற்கிறது எல்.கே.சுதீஷ் பேட்டி


அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை தே.மு.தி.க. வரவேற்கிறது எல்.கே.சுதீஷ் பேட்டி
x
தினத்தந்தி 17 Sept 2020 3:45 AM IST (Updated: 17 Sept 2020 12:39 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை தே.மு.தி.க. வரவேற்கிறது என்று மாநில துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.

வள்ளியூர்,

வள்ளியூர் கோர்ட்டு அருகில் தே.மு.தி.க. சார்பில் பெரியார் பிறந்த நாள், தே.மு.தி.க. போக்குவரத்து தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு மற்றும் கட்சியின் 16-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் விஜி வேலாயுதம் வரவேற்று பேசினார்.மாநில துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெரியார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கட்சி கொடியேற்றினார். பின்னர் ஏழைகளுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தே.மு.தி.க. தொழிற்சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார். பின்னர் எல்.கே.சுதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-

மருத்துவ துறையில் தரமான மருத்துவர்கள் உருவாக வேண்டும் என்பதற்காக நீட் தேர்வுக்கு முன்பு ஆதரவு தெரிவித்தோம். ஆனால் இந்தியா முழுவதும் ஒரே கல்விமுறையை கொண்டு வந்த பின்னர்தான் நீட் தேர்வு கொண்டு வர வேண்டும் என்று கூறினோம். ஆனால் இந்தியா முழுவதும் ஒரே கல்விமுறை கொண்டு வரப்படாததால், தற்போது நீட் தேர்வை எதிர்க்கிறோம்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை வரவேற்கிறோம். தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்களுக்கு தமிழைத் தவிர வேறு மொழி தெரியவில்லை. கூடுதலாக ஒரு மொழியை பயின்றால் இன்னும் அதிகமான வேலைவாய்ப்புகளை பெறலாம். அதேநேரம் தாய்மொழியையும் காக்க வேண்டும். நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசியல்தான் காரணம். இதனை நாம் ஊக்கப்படுத்த கூடாது. தே.மு.தி.க. செயற்குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற டிசம்பர் மாதம் நடக்கிறது. வருகிற பொங்கல் பண்டிகைக்கு பின்னர், சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட அவை தலைவர் மாடசாமி, துணை செயலாளர்கள் அய்யப்பன், பொன்னரசு, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story