பெரம்பலூருக்கு முதல்-அமைச்சர் வரும் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனைத்து விவசாய சங்கங்கள் முடிவு


பெரம்பலூருக்கு முதல்-அமைச்சர் வரும் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனைத்து விவசாய சங்கங்கள் முடிவு
x
தினத்தந்தி 16 Sep 2020 11:39 PM GMT (Updated: 16 Sep 2020 11:39 PM GMT)

பெரம்பலூருக்கு முதல்-அமைச்சர் வரும் போது, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அனைத்து விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்களின் அவரச ஆலோசனை கூட்டம் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ஞானமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜா சிதம்பரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு வெட்டி அனுப்பிய கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலை நிலுவைத் தொகை ரூ.28 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய-மாநில அரசுகள் கரும்பு விலையை உயர்த்தி டன்னுக்கு ரூ.4,500 அறிவிக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு

விவசாயிகளின் நலத்திட்டங்களான பிரதமர் கிசான் நிதியுதவித் திட்டம், பிரதமர் வீட்டு வசதித் திட்டம், மக்காச் சோளத்துக்குப் பூச்சிக் கொல்லி மருந்துகள் வழங்கும் திட்டம், கிணறு வெட்டும் திட்டம், மாட்டு கொட்டகை வழங்கும் திட்டம், விவசாயக் கருவிகள் வழங்கும் திட்டம், வரப்புகள் அமைக்கும் திட்டம் போன்ற திட்டங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால், மாநில அரசு விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரத்துக்குத் தனி உயரழுத்த மும்முனை வழித்தடம் அமைத்து, ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே மின்சாரத்தை வழங்கும் முயற்சியை கைவிட வேண்டும். கல்லாற்றின் குறுக்கே சின்ன முட்டு நீர்த்தேக்கம் அமைத்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரம்பலூர் மாவட்டத்துக்கு வரும் போது, அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.

இதில், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Next Story