லால்குடியில் சம்பா சாகுபடியில் நாற்றங்கால் அமைக்கும் பணி தீவிரம்


லால்குடியில் சம்பா சாகுபடியில் நாற்றங்கால் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 17 Sep 2020 12:50 AM GMT (Updated: 17 Sep 2020 12:50 AM GMT)

லால்குடியில் சம்பா சாகுபடியில் நாற்றங்கால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

லால்குடி,

லால்குடி தாலுகாவில் தெற்கு மற்றும் வடக்கு அய்யன் வாய்க்கால், பங்குனி வாய்க்கால், கூழையாறு, பெருவளை வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால் ஆகிய பாசன வாய்க்கால்கள் உள்ளன. இந்த வாய்க்கால் பாசனபகுதி விவசாயிகள், சம்பா சாகுபடிக்கு எப்போது தமிழக அரசு தண்ணீர் திறக்கும் என்ற ஏக்கத்துடன் விவசாயிகள் காத்திருந்தனர்.

தற்போது மேட்டூர் அணையில் ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது முதல் லால்குடி பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யும் நிலையில் உள்ளது.

நாற்றங்கால்

தற்பொழுது மேட்டூர் அணை திறக்கப்பட்டு நீர் மட்டம் குறைந்து வருவதால் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டி வந்தனர். இந்த நிலையில் லால்குடி தாலுகா பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடிக்கு நாற்றங்கால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வேளாண்மை துறை சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதை நெல், உரம், பூச்சி மருந்துகள் தங்குதடையின்றி கிடைக்கிற ஒத்துழைப்பு வழங்கவும், பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை முறையாக கிடைக்க அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், சம்பா சாகுபடி அறுவடை செய்யும் வரை தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது லால்குடி பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Next Story