சாலையை சீரமைக்க கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சாலையை சீரமைக்க கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Sept 2020 7:16 AM IST (Updated: 17 Sept 2020 7:16 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதற்காக நேற்று அவர்கள் திட்டுவிளை பஸ் நிலையம் முன் திரண்டனர்.

பூதப்பாண்டி,

புத்தனாறு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ராட்சத குழாய் பதிக்கும் பணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பாலமோர் நெடுஞ்சாலையில் நடந்தது. இதற்காக துவரங்காடு, திட்டுவிளை, தெரிசனங்கோப்பு ஆகிய பகுதிகளில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். சாலையை சீரமைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினரும், வியாபாரிகள் சங்கத்தினரும் கோரிக்கை வைத்தனர். ஆனாலும் சாலை சீரமைக்கப்படவில்லை.

அதைத்தொடர்ந்து திட்டுவிளை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதற்காக நேற்று அவர்கள் திட்டுவிளை பஸ் நிலையம் முன் திரண்டனர். ஆனால் போராட்டம் நடத்த போலீசார் அனுமதியளிக்கவில்லை. அதைத்தொடர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதற்கு கட்சியின் நகர தலைவர் மைதீன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நூஹ், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தலைவர் லாயம் மைதீன், மாவட்ட செயலாளர் மணவை சாதிக், மாதவலாயம்பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ், திட்டு விளை நகர தலைவர் அன்சார், செயலாளர் அசாருதீன் மற்றும் வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீஸ் அதிகாரிகளும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது 15 நாட்களுக்குள் சாலை சீரமைப்பு பணிகள் முடிக்கப்படும் என்று கூறினார்கள். அதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து செல்ல தொடங்கினார்கள்.

Next Story