வறுமையின் கொடுமையால் தற்கொலை செய்த தாய்-மகள் உடலை வாங்க ஆளில்லாத சோகம்


வறுமையின் கொடுமையால் தற்கொலை செய்த தாய்-மகள் உடலை வாங்க ஆளில்லாத சோகம்
x

வறுமையின் கொடுமையால் தற்கொலை செய்த தாய்-மகள் உடலை வாங்க ஆளில்லாததால், அந்த உடல்களை போலீசார் அடக்கம் செய்த உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் ஒழுகினசேரி ஆறாட்டு ரோட்டை சேர்ந்தவர் வடிவேல் முருகன் (வயது 78), தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி பங்கஜம் (70). இவர்களுடைய மகள்கள் மாலா (46), சச்சு என்ற மைதிலி (45). இந்த குடும்பம் வறுமையால் வாடி வந்தது. வடிவேல் முருகன் மட்டுமே வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தார். வறுமையின் காரணமாக 2 மகள்களுக்கும் திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் வடிவேல் முருகன் வயோதிகம் காரணமாக நோய் வாய்ப்பட்டார். அதே சமயத்தில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவருக்கு காலில் ஏற்பட்ட காயமும் குணமாகவில்லை. இதனால் வீட்டிலேயே படுத்த படுக்கையாக கிடந்தார். எனவே வடிவேல் முருகனால் வந்து கொண்டிருந்த சிறிது வருமானமும் நின்று போனது. இதனால் உணவுக்கே கஷ்டப்பட்டு வந்த நிலையில் வடிவேல் முருகன் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

உறவினர்கள் இல்லை

இதனால் மனவேதனை அடைந்த பங்கஜமும், அவருடைய 2 மகள்களும் வாழ்க்கையில் வெறுப்படைந்து குளத்தில் குதித்தனர். இதில் பங்கஜமும், மாலாவும் பலியானார்கள். மைதிலி மட்டும் உயிர் பிழைத்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பலியான பங்கஜம், மாலா ஆகியோர் உடல் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவர்களது உடலை வாங்கி அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் இல்லை. வறுமையால் கஷ்டப்பட்டு வந்ததால் அவர்களுக்கு உறவினர்கள் கூட இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து 2 பேரின் உடல்களும் சுசீந்திரம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்ற போலீசார் ஆண்டார்குளம் பகுதியில் ஒரே குழியில் 2 பேரின் உடலையும் அடக்கம் செய்தனர்.

பிரேத பரிசோதனை

இதற்கிடையே மரணம் அடைந்த வடிவேல் முருகனின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மனைவி மற்றும் மகளின் உடலை வாங்க உறவினர்கள் இல்லாத நிலையில் வடிவேல் முருகனின் உடலை வாங்கி அடக்கம் செய்ய அவரது சமுதாயத்தை சேர்ந்தவர்கள் முன்வந்தனர்.

எனவே உடல், அவரது சமுதாயத்தை சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் வடிவேல் முருகன் பிணமாக கிடந்தது தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Next Story