தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் மாணவ-மாணவிகள் உள்பட 74 பேருக்கு கொரோனா தொற்று


தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் மாணவ-மாணவிகள் உள்பட 74 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 17 Sept 2020 8:09 AM IST (Updated: 17 Sept 2020 8:09 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மாணவ-மாணவிகள் உள்பட 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி காரிமங்கலம் பகுதியை சேர்ந்த வங்கி மேலாளருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவரை தனிமைப்படுத்தி பரிசோதித்தபோது கொரோனா தொற்று உறுதியானது. தர்மபுரி இலக்கியம்பட்டி மற்றும் கே.நடுஅள்ளியை சேர்ந்த 2 கல்லூரி மாணவிகள், தர்மபுரி ஆசிரியர் காலனி, கம்பைநல்லூர், அனுமந்தபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதேபோல் தர்மபுரி விஸ்வநாதன் நகர், பிடமனேரி ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. கடகத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவர், தேங்காமரத்துபட்டியை சேர்ந்த பள்ளி மாணவர் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 74 பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது.

2,071 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 74 பேரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,071 ஆக அதிகரித்து உள்ளது.

Next Story