சேலத்தில் பரிதாபம்: குடிசை இடிந்து தொழிலாளி பலி 3 பேர் படுகாயம்


சேலத்தில் பரிதாபம்: குடிசை இடிந்து தொழிலாளி பலி 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 17 Sep 2020 5:48 AM GMT (Updated: 17 Sep 2020 5:48 AM GMT)

சேலத்தில் குடிசை இடிந்து விழுந்து தொழிலாளி பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

சேலம்,

சேலம் பெரமனூர் கோவிந்தகவுண்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 70). இவர் குடிசையில் வசித்து வருகிறார். லட்சுமி நேற்று பக்கத்து வீட்டில் நின்று பேசி கொண்டிருந்தார். அவருடைய குடிசை முன்பு அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகளான கந்தசாமி (55), தம்பிதுரை (28), பன்னீர்செல்வம் (45) மற்றும் ஆறுமுகம் (65) ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக லட்சுமியின் குடிசை திடீரென இடிந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் சுவர்களின் இடிபாடுகளுக்குள் அவர்கள் சிக்கி தவித்தனர். அவர்களுடைய அலறல் சத்தத்தை கேட்டு அந்த பகுதி மக்கள் அங்கு ஓடி வந்தனர்.

தொழிலாளி சாவு

பின்னர் இடிபாடுகளை அகற்றி அவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார். தம்பிதுரை, பன்னீர்செல்வம், ஆறுமுகம் ஆகியோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு சென்று விசாரித்தனர்.

மழையால் சுவர் நனைந்தது

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, கடந்த சில நாட்களாக சேலத்தில் பெய்த மழையின் காரணமாக லட்சுமி வசித்த குடிசையின் மண் சுவர்கள் நன்றாக நனைந்துள்ளன. இதனால் அந்த குடிசை இடிந்து விழுந்தது, என்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிசை இடிந்து விழுந்து தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story