கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்


கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்
x
தினத்தந்தி 17 Sept 2020 11:22 AM IST (Updated: 17 Sept 2020 11:22 AM IST)
t-max-icont-min-icon

கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு நேற்று மாலையில் மண்எண்ணெய் கேனுடன் ஒரு பெண் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தனது கணவரை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க போவதாக அவர் தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்த வடக்கு போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணை அப்புறப்படுத்த முயன்றனர்.

ஆனால் அதற்குள் அந்த பெண் சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஒருவழியாக அந்த பெண்ணை சமாதானம் செய்த போலீசார், அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

தொழிலாளி மீது தாக்குதல்

விசாரணையில் அவர், வேடசந்தூர் தாலுகா கூத்தாங்கல்பட்டியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளியான பெருமாள் மனைவி ராமாயி (வயது 37) என்பது தெரியவந்தது. மேலும் கடந்த 6-ந்தேதி அவருடைய வீட்டின் முன்பு கட்டிலில் ராமாயியின் கணவர் பெருமாள் படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது வீட்டருகே கோழிகளை மேயவிட்டவர்களை அவர் திட்டியுள்ளார். ஆனால் பக்கத்து வீட்டை சேர்ந்த தம்பதியை தான் பெருமாள் திட்டுகிறார் என நினைத்த அந்த தம்பதி உருட்டு கட்டையால் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவரை ராமாயியும், அவருடைய மகளும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும் இதுகுறித்து கூம்பூர் போலீஸ் நிலையத்திலும் அவர்கள் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பெருமாளை தாக்கிய தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு ராமாயி போராட்டத்தில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இதையடுத்து ராமாயி கூறிய தகவல் உண்மை தானா? அவருடைய கணவரை தாக்கியவர்கள் மீது கூம்பூர் போலீசார் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்று வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனை முன்பு பெண் ஒருவர் சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story