மது பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை: ‘காதலுக்கு இடையூறு செய்ததால் தீர்த்து கட்டினேன்’ கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம்


மது பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை: ‘காதலுக்கு இடையூறு செய்ததால் தீர்த்து கட்டினேன்’ கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 17 Sept 2020 12:00 PM IST (Updated: 17 Sept 2020 12:00 PM IST)
t-max-icont-min-icon

காதலுக்கு இடையூறு செய்ததால் நண்பரை மது பாட்டிலால் குத்தி கொன்றேன் என்று வாலிபர் கொலையில் கைதான நண்பர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

குள்ளனம்பட்டி,

திண்டுக்கல் அருகே உள்ள ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் சகாதேவன். இவரது மகன் மணிகண்டன் (வயது 23). நேற்று முன்தினம் இவர் முத்தமிழ் நகர் அருகே ஓடைப்பட்டி காட்டுப் பகுதியில் மது பாட்டிலால் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

கைது

தகவல் அறிந்த திண்டுக்கல் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம், சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதில் அதே பகுதியைச் சேர்ந்த அஜித் (21) என்பவர் மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

கைதான அஜித் போலீசில் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு:-

நானும் மணிகண்டனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். நான் எங்கள் தெருவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தேன். இது மணிகண்டனுக்கு பிடிக்காமல் காதலுக்கு இடையூறு செய்யும் வகையில் பெண்ணின் பெற்றோரிடம் என்னை பற்றி அவதூறாக கூறினார். ஆகவே மணிகண்டன் உயிருடன் இருந்தால் எனது காதல் நிறைவேறாது என நினைத்து மணிகண்டனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டடேன்.

இதையடுத்து மது அருந்த செல்லலாம் என மணிகண்டனை அழைத்தேன். அதன்பின்னர் நானும் மணிகண்டனும் சேர்ந்து மது அருந்தினோம். இந்தநிலையில் மதுபோதையில் இருந்த மணிகண்டனை மது பாட்டிலால் குத்தி கொலை செய்தேன். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் நான் தப்பிச்செல்ல முயன்றபோது போலீசாரிடம் சிக்கிக் கொண்டேன். இவ்வாறு அஜித் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story