தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து நடந்த ஆர்ப்பாட்டங்களால் பரபரப்பு
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்தடுத்து 4 ஆர்ப்பாட்டங்கள் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஒரே நாளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4 அமைப்புகள் சார்பில் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. அதன்படி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு டிசம்பர்-3 மக்கள் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மக்களின் வாழ்வாதார உரிமையை பறிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் ஏற்றுவதை கண்டித்தும், அதை தடுக்க தவறும் மாநில அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் காளிராஜ் தலைமை தாங்கினார்.
இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும், ரெயிலில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தமிழ்பெருமாள் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. விருதுநகர் மாவட்டத்தில் அரசியல் பிரமுகர் ஒருவரின் கொலை வழக்கில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மீது போலீசார் பொய் வழக்கு போட்டதாக போலீசாரை கண்டித்தும், பொய் வழக்கை ரத்து செய்யக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் திருமுருகன், மாவட்ட மகளிரணி தலைவி அழகுராணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
அதன்பிறகு தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில், ஊராட்சி குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதுடன், தூய்மை காவலர்களுக்கு ரூ.1,000 சம்பள உயர்வு வழங்க அரசாணை வெளியிட வேண்டும், 3 ஆண்டுகள் பணி முடித்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி தலைமை தாங்கினார். இதில் தூய்மை பணியாளர்கள், குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story