இருளர் சமுதாயத்தை சார்ந்த மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் - கலெக்டர் நேரில் சென்று வழங்கினார்


இருளர் சமுதாயத்தை சார்ந்த மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் - கலெக்டர் நேரில் சென்று வழங்கினார்
x
தினத்தந்தி 17 Sep 2020 9:00 AM GMT (Updated: 17 Sep 2020 8:55 AM GMT)

இருளர் சமுதாயத்தை சார்ந்த மாணவிகளுக்கு சாதி சான்றிதழை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று வழங்கினார்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை பேகோபுரம் 10-வது தெருவை சேர்ந்தவர் சித்ரா. இவருக்கு வினோதினி, மணிமேகலை, புவனேஸ்வரி, மோனிஷா என 4 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருளர் சமுதாயத்தை சேர்ந்தவர்களாவர். சித்ராவின் கணவர் ஏழுமலை உயிரிழந்து விட்டார். கணவரை இழந்த நிலையில் தன் குல தொழிலான கால்வாயில் மண் எடுத்து அதில் கிடைக்கும் சிறு, சிறு தங்கம் மற்றும் வெள்ளி வகைகளை எடுத்து கொண்டு, அதை நகை கடையில் விற்று பிழத்து வருகிறார். தன்னுடைய உழைப்பில் சொந்த வீடு கட்டியும், தனது நான்கு பெண் குழந்தைகளையும் படிக்க வைத்து உள்ளார். இதில் வினோதினி கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டும், மணிமேகலை திருவண்ணாமலை நகராட்சி அரசு பெண்கள் 11-ம் வகுப்பும், புவனேஸ்வரி 9-ம் வகுப்பு, மோனிஷா திருவண்ணாமலை விக்டோரியா பள்ளியில் 7-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

கடந்த மாதம் வினோதினி கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் சாதி சான்றிதழ் வழங்கக் கோரி மனு அளித்தார். விண்ணப்பத்தினை பரிசீலனை செய்த கலெக்டர் நேற்று மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று வினோதினி உள்பட அவரது சகோதரிகள் 4 பேருக்கும் சாதி சான்றிதழை வழங்கியதுடன் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையினையையும் வழங்கினார். அப்போது திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீதேவி, உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குமார், துணை கலெக்டர் (பயிற்சி) அஜீதாபேகம் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story