பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு: 8 கணினி ஆபரேட்டர்கள் பணி நீக்கம் - அதிகாரிகள் நடவடிக்கை
வேலூர் மாவட்டத்தில் பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக 8 கணினி ஆபரேட்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்,
இந்தியா முழுவதும் பிரதமரின் கிசான் திட்டத்தில் நலிவுற்ற விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த திட்டத்தில் விவசாயிகள் அல்லாத நபர்கள் முறைகேடாக பதிவு செய்து நிதிஉதவி பெற்று வருவது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கொரோனா நிதி பெற்று தருவதாக கூறி பொதுமக்களிடம் ஆதார் எண், வங்கி கணக்கு எண், ரேஷன்கார்டு உள்ளிட்டவற்றை சிலர் பெற்று பிரதமரின் நிதிஉதவி திட்டத்தில் பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டதும், இந்த திட்டத்தில் பலகோடி மோசடி நடைபெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்திலும் பிரதமரின் நிதிஉதவி திட்டத்தில் முறைகேடாக பதிவு செய்து ரூ.1½ கோடி மோசடி நடைபெற்றதும், வேலூர் மற்றும் பிறமாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் அல்லாதோர் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் ஆவணங்கள் முறைகேடாக பதிவுசெய்து நிதிஉதவி பெற்று வருவது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து இந்த திட்டத்தில் தற்காலிகமாக விவசாயிகளுக்கு நிதிஉதவி வழங்குவது நிறுத்தப்பட்டது.
மேலும் வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 வட்டாரங்களில் நிதிஉதவி பெறும் மற்றும் நிதிஉதவி பெற விண்ணப்பித்த நபர்கள் குறித்து விசாரிக்க உதவி கலெக்டர் தலைமையிலான 7 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த மோசடி தொடர்பாக வேலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருந்தனர்.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் பணிபுரிந்து வந்த 8 கணினி ஆபரேட்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் பிரதமரின் நிதிஉதவி திட்டத்தில் முறைகேடாக பதிவு செய்து மோசடி செய்தவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து திரும்ப பணம் பெறப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.62 லட்சம் திரும்ப பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள பணத்தையும் விரைவில் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் நிதிஉதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டு பணமோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அவர்கள் விவசாயிகளின் ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த கணினி ஆபரேட்டர்களின் பட்டியலை பெற்று விசாரணை நடத்தி வருகிறார்கள். வேலூர் மாவட்டத்தில் 8 கணினி ஆபரேட்டர்கள் பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் 8 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் முடிவில் அவர்கள் முறைகேட்டில் ஈடுபடவில்லை என்று தெரிய வந்தால் மீண்டும் பணியில் சேர அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story