தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தை மூடக்கோரி கிராம மக்கள் திடீர் போராட்டம் - வானூரில் பரபரப்பு
வானூரில் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தை மூடக்கோரி கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் அதிகளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் அப்பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே இந்நிறுவனத்தை மூடக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை வானூர் தாசில்தார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை காலி குடங்களுடன் திரண்டு சென்று அந்த குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தை மூடக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் வானூர் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து போகச்செய்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், உரிய அனுமதியின்றி இங்கு செயல்பட்டு வரும் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தை மூட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் நாங்கள் அனைவரும் சேர்ந்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
Related Tags :
Next Story