பரங்கிப்பேட்டை பகுதியில் பருவமழை முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு


பரங்கிப்பேட்டை பகுதியில் பருவமழை முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 17 Sep 2020 3:45 PM GMT (Updated: 17 Sep 2020 3:52 PM GMT)

பரங்கிப்பேட்டை பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பரங்கிப்பேட்டை, 

சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் அருகே ராதாவிளாகம் கிராமத்தில் உப்பனாறு வடிகாலின் குறுக்கே, கடல்நீர் உட்புகுவதை தடுக்க கடைமடையில் கதவணை கட்டும் பணிக்கு ரூ.15.25 கோடி அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 1.12.2019 அன்று முதல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிச்சாவரத்தில் இருந்து ராதாவிளாகம் வரை 5 கி.மீ நீளத்திற்கு கரையை பலப்படுத்தும் பணியும், 47.40 மீட்டர் நீளத்திற்கு 12 கதவணைகளை கொண்ட ஒழுங்கியம் அமைக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 6 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் இருந்து வடியபெறும் சுமார் 3,500 கனஅடி வெள்ள நீர் வெளியேற்றப்படும். மேலும் கடல் நீர் உட்புகாமல் தடுக்கப்படுவதுடன், ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இதுபோல் அருகில் உள்ள 13 கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் மேம்பட்டு, குடி நீருக்கு பயன்படும். இந்த பணிகள் வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக பரங்கிப்பேட்டை, கீரப்பாளையம், மேல்புவனகிரி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வடகிழக்கு பருவமழைக்காலங்களில் ஏற்படும் சேதங்களை உடடினயாக சரிசெய்வதற்கும், மரங்கள் சாய்ந்தால் அதனை உடனடியாக அறுப்பதற்கும், நோய் பரவாத வண்ணம் கொசு மருந்து தெளிப்பதற்கும், இரவு நேரங்களில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்வதற்கு மின்சாதன கருவிகள் போன்ற பேரிடர் காலங்களில் பயன்படுத்தக் கூடிய மீட்பு கருவிகளையும், வெள்ளநீரால் கால்வாய்களில் உடைப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்வதற்கு சவுக்கு கம்புகள், மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளனவா? என்றும் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அருணகிரி, சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவஞானசுந்தரம், அசோக்பாபு, சக்தி பிரேமா, பாலகிருஷ்ணன், விமலா, உதவி பொறியாளர் ரமேஷ், பொறியாளர் சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story