நடிகர் சுஷாந்த் சிங்கின் உடலை பார்க்க நடிகை ரியா பிணவறைக்கு சென்றதில் விதிமுறை மீறல் இல்லை


நடிகர் சுஷாந்த் சிங்கின் உடலை பார்க்க நடிகை ரியா பிணவறைக்கு சென்றதில் விதிமுறை மீறல் இல்லை
x
தினத்தந்தி 18 Sept 2020 4:49 AM IST (Updated: 18 Sept 2020 4:49 AM IST)
t-max-icont-min-icon

சுஷாந்த் சிங்கின் உடலை பார்க்க நடிகை ரியா பிணவறைக்கு சென்றதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை என மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது.

மும்பை,

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி பாந்திராவில் உள்ள வீட்டில் பிணமாக மீட்கப்பட்டார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கூப்பர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தநிலையில் சுஷாந்தின் உடலை பார்க்க அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி விதிகளை மீறி கூப்பர் ஆஸ்பத்திரியின் பிணவறைக்குள் சென்றதாக செய்திகள் வெளியாகின. இந்த சம்பவம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது.

அப்போது ரியா ஆஸ்பத்திரியில் தடை செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறைக்குள் செல்லவில்லை என்பது தெரியவந்தது. அவர் பார்வையாளர்கள் காத்திருப்பு பகுதியில் மட்டுமே இருந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த விவகாரத்தில் எந்த விதிமுறை மீறல்களும் நடைபெறவில்லை எனவும், ஆஸ்பத்திரி நிர்வாகம் அல்லது போலீசார் எந்த தவறும் செய்யவில்லை எனவும் மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது.

இதுகுறித்து மனித உரிமை ஆணையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும் போது இந்த விவகாரத்தில் ஆஸ்பத்திரி டீன் தரப்பிலோ அல்லது போலீஸ் தரப்பிலோ எந்த விதிமுறை மீறல்களும் நடக்கவில்லை என்ற முடிவுக்கு ஆணையம் வருகிறது” என்றார்.


Next Story