குமரியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி புதிதாக 118 பேருக்கு தொற்று


குமரியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி புதிதாக 118 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 18 Sept 2020 8:20 AM IST (Updated: 18 Sept 2020 8:20 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள். புதிதாக 118 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பிற மாவட்டங்களில் அரசின் ஊரடங்கு தளர்வுகள் கடைப்பிடிக்கப்பட்ட போதிலும் குமரி மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. எனவே கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த சில நாட்களாக, தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நூறுக்குள்ளேயே இருந்தது. ஆனால் நேற்று மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ தாண்டியது.

அதாவது குமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 118 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதோடு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 432 ஆக உயர்ந்து இருப்பதாகவும் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

2 பேர் பலி

குமரியில் நேற்று 2 பேர் உயிரை கொரோனா காவு வாங்கி இருக்கிறது. அதாவது ஆரல்வாய்மொழியை சேர்ந்த 62 வயது ஆண் மற்றும் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த 44 வயது பெண் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகினர். இவர்கள் 2 பேருமே ஏற்கனவே சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தவர்கள் ஆவர்.

குமரி மாவட்டத்தில் தற்போது உயிரிழந்தவர்களையும் சேர்த்து மொத்த பலி எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது.

Next Story