தக்கலை அருகே பரிதாபம் காதல் திருமணம் செய்த பெயிண்டர் மின்சாரம் தாக்கி பலி


தக்கலை அருகே பரிதாபம் காதல் திருமணம் செய்த பெயிண்டர் மின்சாரம் தாக்கி பலி
x

தக்கலை அருகே காதல் திருமணம் செய்த பெயிண்டர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

பத்மநாபபுரம்,

கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம் கானவூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 33). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று தக்கலை அருகே சாமியார்மடம் பகுதியில் ஒரு வீட்டில் பெயிண்டிங் வேலைக்கு சென்றார். அவருடன் வேறு சில தொழிலாளர்களும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். சேகர் வீட்டின் முதல் மாடியில் இரும்பு கம்பியில் இணைக்கப்பட்ட பிரஸ் மூலம் பெயிண்டிங் செய்து கொண்டிருந்தார். அந்த வீட்டையொட்டி மின்கம்பி சென்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக சேகரின் கையில் இருந்த இரும்பு கம்பி, மின்கம்பி மீது பட்டது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

பரிதாப சாவு

இதை பார்த்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விரைந்து செயல்பட்டு சேகரை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சேகர் ஏற்கனவே இறந்ததாக கூறினர்.

இதுகுறித்து தக்கலை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சேகருக்கு ஜினா (28) என்ற மனைவியும், ஜோனட் (3) என்ற மகனும் உள்ளனர். சேகர், ஜினாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story