தர்மபுரி அரசு மருத்துவமனையில் சுவாச பிரச்சினை உள்ளவர்களுக்கு பரிசோதனை மையம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


தர்மபுரி அரசு மருத்துவமனையில் சுவாச பிரச்சினை உள்ளவர்களுக்கு பரிசோதனை மையம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 Sep 2020 4:05 AM GMT (Updated: 18 Sep 2020 4:05 AM GMT)

தர்மபுரி அரசு மருத்துவமனையில் சுவாச பிரச்சினை உள்ளவர்களை பரிசோதிக்க அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக பரிசோதனை மையத்தை கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்.

தர்மபுரி,

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தின் முகப்பில் சுவாச பிரச்சினை, மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பிரத்யேக பரிசோதனை மையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை கலெக்டர் மலர்விழி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் இளங்கோவன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சந்திரசேகர், மருத்துவ கண்காணிப்பாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அரசு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர். அப்போது கலெக்டர் மலர்விழி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பு பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வருபவர்களை செட்டிக்கரை தனிமைப்படுத்தும் மையத்தில் தனிமைப்படுத்துவது சாத்தியமில்லை. எனவே வெளியூர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு சளி,காய்ச்சல், மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டால் தர்மபுரி மாவட்டத்தில் ஆங்காங்கே நடைபெறும் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்களுக்கு தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

1000 பேருக்கு பரிசோதனை

தர்மபுரி அரசு மருத்துவமனையில் தற்போது தொடங்கப்பட்டுள்ள பிரத்யேக பரிசோதனை மையத்தில் சுவாசம் மற்றும் மூச்சு விடுவதில் பிரச்சினைகள் உள்ள புறநோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையம் தற்போது கொரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவாக மாற்றப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டபோதும் எவ்வித அறிகுறியும் இல்லாமல் வருவோருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் ஒரு நாளில் 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்புக்கான புற அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு சி.டி ஸ்கேன் முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன்மூலம் நுரையீரலில் பாதிப்பு உள்ளதா? என அறிந்து தேவைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு கலெக்டர் மலர்விழி கூறினார்.

Next Story