அங்கொட லொக்காவுடன் தொடர்பு: இலங்கை போலீஸ்காரரை காவலில் எடுத்து விசாரணை


அங்கொட லொக்காவுடன் தொடர்பு: இலங்கை போலீஸ்காரரை காவலில் எடுத்து விசாரணை
x
தினத்தந்தி 18 Sept 2020 2:45 PM IST (Updated: 18 Sept 2020 2:58 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை தாதா அங்கொடலொக்காவுடன் உள்ளதொடர்பு குறித்து கைதான இலங்கை போலீஸ்காரரை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கொழும்பு போலீஸ்நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் பிரதீப்குமார் பண்டரக்கா (வயது40).இவருக்கும் போதை பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து இலங்கை போலீசார் தேடி வந்தனர். தன்னை போலீசார் தேடுவதை அறிந்த பிரதீப்குமார் பண்டரக்கா இலங்கையில் இருந்து படகுமூலமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்துக்கு தப்பி வந்துவிட்டார். அங்கு வந்தபோது தன்னை அழைத்து செல்பவருக்கு போனில் தகவல் கொடுக்க முயன்றார். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆனது. இதனால் அவர் அந்த பகுதியில் இருந்த மீனவர்கள் உள்பட பலரிடம் சிங்கள மொழியில் பேசி செல்போன் கேட்டார். அவரது பேச்சு புரியாத மக்கள் இதுகுறித்து மண்டபம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது அவர் இலங்கையை சேர்ந்த போலீஸ்காரர் என்பதும் கோவையில் இறந்த இலங்கை தாதா அங்கொடலொக்காவுடன் தொடர்பில் இருந்தவர் என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து மண்டபம் போலீசார் கோவை சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு ராஜூவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக ராமேசுவரம் சென்று பிடிபட்ட போலீஸ்காரர் பிரதீப்குமார் பண்டரக்காவிடம், அங்கொட லொக்காவின் போட்டோவை காண்பித்து விசாரித்தார். அப்போது அங்கொடலொக்கா இலங்கையில் மிகப்பெரிய தாதாவாக வலம் வந்தார் என்றும், அவருடன் தொடர்பு இருந்ததாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து இலங்கை போலீஸ்காரரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே பிரதீப்குமார் பண்டரக்காவை போலீஸ் காவலில் விசாரிக்க ராமநாதபுரம் கோர்ட்டில் கோவை சி.பி.சி.ஐ.டி போலீஸ் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 4 நாட்கள் விசாரிக்க நேற்று கோர்ட்டு அனுமதி வழங்கியது. கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் இலங்கை போலீஸ்காரரிடம் அங்கொட லொக்கா தொடர்பான முழு விவரங்களையும் ராமநாதபுரத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

அங்கொடலொக்காவின் உடற்கூறு பரிசோதனை முடிவில் அவர் மாரடைப்பால் இறந்தது தெரியவந்துள்ளது. இந்தநிலையில் இறந்தவர் அங்கொட லொக்காதானா? என்பதை உறுதி படுத்துவதற்கான டி.என்.ஏ. பரிசோதனைக்கான நடவடிக்கையையும் சி.பி.சி.ஐ.டி.போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Next Story