கடன் பிரச்சினையால் வியாபாரி திடீர் மாயம்: விஷம் கொடுத்து மகளை கொன்று பெண் தற்கொலை - வாலாஜாவில் சோக சம்பவம்
வாலாஜாவில் கடன் பிரச்சினையால் வியாபாரி திடீரென மாயமானார். அதில் மனமுடைந்த பெண் தனது மகளுக்கு விஷத்தை கொடுத்து கொன்று, அதே விஷத்தை தானும் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
வாலாஜா,
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் அனந்தலை ரோட்டில் உள்ள தேசாய் செட்டித்தெருவில் வசிப்பவர் சரவணபிரசாத். வியாபாரியான அவர், அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். அவர் பலரிடம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் அவர் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கவில்லை. கொரோனா ஊரடங்கால் மளிகைக்கடையில் சரியாக வியாபாரம் ஆகாததால் அவருக்கு கடன் தொல்லை அதிகமானது.
கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பிக்கேட்டு அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதில் மனமுடைந்த சரவண பிரசாத் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி மற்றும் மகளுக்கு தெரியாமல் திடீரென வீட்டை விட்டு வெளியேறி எங்கேயோ மாயமாகி விட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை.
காணாமல் போன கணவரை, மனைவி புஷ்பராணி தேடி வந்தார். ஆனால் கணவரை கண்டு பிடிக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்து புஷ்பராணியிடம் கடனை கொடுக்கும் படி கேட்டனர். அதில் மனமுடைந்த மனைவி புஷ்பராணி (வயது 35) தனது 7 வயது மகள் தர்ஷினிக்கு பூச்சி மருந்தை (விஷம்) கொடுத்து குடிக்க வைத்துள்ளார். மகள் குடித்ததும், மீதியிருந்த பூச்சி மருந்தை தானும் குடித்து அவர் தற்கொலைக்கு முயன்றார்.
வீட்டில் சுய நினைவின்றி கிடந்த தாய், மகளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களுக்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி தர்ஷினி மற்றும் புஷ்பராணி ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்சினையால் மகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் வாலாஜா பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.
Related Tags :
Next Story