வேலூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 137 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,202 ஆக உயர்ந்தது


வேலூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 137 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,202 ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 18 Sept 2020 4:45 PM IST (Updated: 18 Sept 2020 4:39 PM IST)
t-max-icont-min-icon

அரியூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 137 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,202 ஆக உயர்ந்துள்ளது.

வேலூர், 

அரியூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக சளி, இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி காணப்பட்டன. அதையடுத்து அவருக்கு சளிமாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதன் முடிவுகள் நேற்று வந்தது. அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவரின் குடும்பத்தினர், உடன் பணிபுரிந்த போலீஸ்காரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதேபோன்று வேலூர் மத்திய ஆண்கள் ஜெயில் காவலர், விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஆகியோரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். வேலூர் கொணவட்டத்தில் மளிகை கடை நடத்தி வரும் 2 வியாபாரிகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

வேலூர் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வேலூரில் உள்ள விடுதியில் தங்கி அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தை சேர்ந்த 10 பேருக்கும் தொற்று உறுதியானது. அனைவரும் அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதைத்தவிர வேலூர் தொரப்பாடியில் பச்சிளம் பெண்குழந்தை, பலவன்சாத்துகுப்பத்தில் பச்சிளம் பெண்குழந்தை, காட்பாடியில் 4 வயது ஆண்குழந்தை, ஓட்டேரியில் 5 வயது பெண்குழந்தை, விருபாட்சிபுரத்தில் 75 வயது மூதாட்டி, காந்திநகரில் 80 வயது முதியவர், ஆரணியில் அரிசிமண்டி நடத்தி வரும் சைதாப்பேட்டையை சேர்ந்தவர், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் 18 பேர் உள்பட மாநகராட்சி பகுதியில் 71 பேர் என்று மாவட்டம் முழுவதும் நேற்று ஒரேநாளில் 137 பேருக்கு கொரோனா உறுதியானது.

தொற்று பாதித்த 137 பேரும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை வேலூர் மாவட்டத்தில் 13202 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11,987 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story