திருப்பூர் மாவட்டத்தில், மேலும் 191 பேருக்கு கொரோனா - 25 பேர் குணமடைந்தனர்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 25 பேர்குணமடைந்து வீடு திரும்பினர்.
திருப்பூர்,
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டாலும், கொரோனாவின் பாதிப்பு குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து தான் இருக்கிறது. நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு 6 ஆயிரத்தையே நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று மட்டும் தமிழகத்தில் 5 ஆயிரத்து 560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவின் பாதிப்பு இருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்கள் அனைவருக்கும் தற்போது மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 544-ஆக உயர்ந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஒரு வாரமாகவே பாதிப்பு எண்ணிக்கை 200-ஐ நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இது பொதுக்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொது போக்குவரத்திற்கு தளர்வு விதிக்கப்பட்டதில் இருந்து திருப்பூருக்கு நாளுக்கு நாள் வேலை தேடி வருகிறவர்களின் எண்ணிக்கையும், வெளிபகுதிகளில் இருந்து வருகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் போது தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் பாதிப்பும் உயர தொடங்கியுள்ளது. வருகிற காலங்களில் மேலும் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் திருப்பூர் மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுபோல் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. இதில் நேற்று 25 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 84 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.
மேலும், கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 70 பேர் கண்காணிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இருக்கிறார்கள். அவர் களுக்கு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story