ஒரத்தநாடு அருகே பரபரப்பு: என்ஜினீயருக்கு பார்சலில் வந்த வெடிபொருட்கள் - போலீசார் விசாரணை
ஒரத்தநாடு அருகே என்ஜினீயருக்கு வந்த பார்சலில் வெடிகுண்டு பொருட்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் கண்ணந்தக்குடி மேலையூர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் அறிவழகன்(வயது 28). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ளார். இந்த நிறுவனத்தின் கவர்ச்சியான வாக்குறுதிகளை நம்பிய அறிவழகன், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை உறுப்பினர்களாக சேர்த்து இதன் மூலமாக ரூ.54 லட்சத்தை அந்த நிறுவனத்தில் செலுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த நிறுவனம் கூறியபடி அறிவழகன் உள்ளிட்டவர்களுக்கு பணத்தை திருப்பி தரவில்லை. இதனால் தன்னை சம்மந்தப்பட்ட நிதி நிறுவனம் ஏமாற்றி விட்டதாகவும் தனது மூலமாக செலுத்தப்பட்ட ரூ.54 லட்சத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி கடந்த 1-ந் தேதி அறிவழகன் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அறிவழகனுக்கு நேற்று முன்தினம் கொரியரில் ஒரு பார்சல் வந்து இருப்பதாக ஒரத்தநாட்டில் உள்ள கொரியர் அலுவலகத்தில் இருந்து அறிவழகனுக்கு தகவல் வந்துள்ளது. அன்றைய தினம் அறிவழகன் தஞ்சையில் இருந்ததால் பார்சலை அறிவழகனின் தந்தை கருணாநிதி ஒரத்தநாட்டில் இருந்து வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
நேற்று காலை அறிவழகன் அந்த பார்சலை பிரித்து பார்த்தார். அப்போது அதில், வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதனை கண்டு அறிவழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அறிவழகன் மற்றும் குடும்பத்தினர் பாதுகாப்பு கருதி உடனடியாக வெடிபொருட்களை அவர்களது தென்னந்தோப்பில் குழிதோண்டி புதைத்தனர்.
தனக்கு வந்த பார்சலில் வெடிபொருட்கள் இருந்தது குறித்து ஒரத்தநாடு போலீசில் அறிவழகன் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அறிவழகனின் தென்னந்தோப்பிற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு புதைக்கப்பட்டு இருந்த வெடிபொருட்களை தோண்டி எடுத்து ஆய்வு செய்தனர்.
அதில், வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தக்கூடிய டெட்டனேட்டர், ஜெலட்டின் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர். திருச்சி-தென்னூர், சி.காத்திரப்பன் என்ற முகவரியில் இருந்து அறிவழகனுக்கு பார்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ள முகவரி போலியானது என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனால் அறிவழகனுக்கு போலியான முகவரியில் பார்சலில், வெடிபொருட்களை அனுப்பியது யார்? எதற்காக அனுப்பினார்கள்? அறிவழகனை மிரட்டுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டதா? இதன் பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்ஜினீயருக்கு பார்சலில் வெடிபொருட்கள் வந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story