வேப்பந்தட்டை அருகே, வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு - அடுத்தடுத்த வீடுகளில் நகை-பணம் திருட்டு
வேப்பந்தட்டை அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார். அதே பகுதியில் அடுத்தடுத்து வீடுகளில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியம்மாபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த மீராசாகிப். இவருடைய மனைவி மெகருன்னிஷா(வயது 40). மீராசாகிப் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மெகருன்னிஷா நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து குழந்தைகளுடன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார்.
நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், மெகருன்னிஷாவின் கழுத்தில் கிடந்த சுமார் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால் திடுக்கிட்டு கண் விழித்த மெகருன்னிஷா, திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வருவதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதேபோல் அதே பகுதியில் உள்ள அல்லாபிச்சை (70) என்பவருடைய வீட்டில் தோடு, மூக்குத்தி என மொத்தம் 3 பவுன் நகைகளையும், ராஜேஷ் (30) என்பவருடைய வீட்டில் ரூ.5 ஆயிரம் ரொக்கத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். மேலும் அதே பகுதியில் வசிக்கும் தில்ஷாத் பேகம் (42), முஸ்தாபா (53) ஆகியோருடைய வீடுகளிலும் கொள்ளை முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜவகர், அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த பகுதியில் மோப்பம் பிடித்தபடி ஓடிய மோப்ப நாய் சிறிது தூரத்தில் நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பு மற்றும் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த தொடர் திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story