கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்: சயான், மனோஜ் உள்பட 8 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர் - தேடப்பட்ட சதீசன் சரணடைந்தார்


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்: சயான், மனோஜ் உள்பட 8 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர் - தேடப்பட்ட சதீசன் சரணடைந்தார்
x
தினத்தந்தி 19 Sep 2020 6:30 AM GMT (Updated: 19 Sep 2020 6:22 AM GMT)

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உள்பட 8 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜராகினர். மேலும் தேடப்பட்ட சதீசன் சரணடைந்தார்.

ஊட்டி, 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சயான், மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த 16-ந் தேதி கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. அப்போது கோவை மத்திய சிறையில் இருந்த சயான், மனோஜ், பொள்ளாச்சி சிறையில் இருந்து மனோஜ்சாமி, உதயகுமார், ஜித்தின் ராய் மற்றும் சம்சீர் அலி, சந்தோஷ் சாமி உள்பட 8 பேர் ஆஜராகினர். ஆனால் சதீசன், தீபு ஆகிய 2 பேர் தலைமறைவாக இருந்தனர். இதனால் தனிப்படை போலீசார் அவர்களை தேடி வந்தனர். பின்னர் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. நேற்று மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியது.

அப்போது சயான், மனோஜ் உள்பட 8 பேர் ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இதேபோல் தலைமறைவாக இருந்த சதீசன் கோர்ட்டில் சரணடைந்தார். இதனால் அவர் மீதான பிடிவாரண்டு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள திபுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.

அரசு வக்கீல் பாலநந்தகுமார் ஆஜராகி கோத்தகிரி இரும்பு கடையில் பணியாற்றி வந்த மணிகண்டன், பெட்ரோல் பங்கில் வேலை செய்த சீனிவாசன், ஓட்டல், டீ கடையில் பணியாற்றி வந்த பிரபு, பாபு ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

இதையடுத்து மாவட்ட நீதிபதி வடமலை வழக்கு விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story