பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Sep 2020 10:15 PM GMT (Updated: 19 Sep 2020 6:54 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் சங்கரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில், பொதுத்துறைகளை தனியாருக்கு கொடுக்கக்கூடாது, ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரசல், பேச்சிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர் குமாரவேல், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜாய்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். கொரோனா காலத்தை பயன்படுத்தி மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்வி கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு கொள்கை, மின்சார திருத்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் உற்பத்தி பொருட் கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய சட்டங்களையும், கொள்கைகளையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ஜோதிபாசு, இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் சரோஜா ஆகியோர் தலைமை தாங்கினர். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர் சேதுராமலிங்கம், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பரமராஜ், தாலுகா செயலாளர் பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், நகர செயலாளர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் நம்பிராஜன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கருங்குளம் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீவைகுண்டம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கணபதி, ராமச்சந்திரன், ராமலிங்கம், சுவாமிதாஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எட்டயபுரம் பட்டத்துவிநாயகர் கோவில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில், தாலுகாக்குழு உறுப்பினர்கள் செல்வகுமார், நடராஜன், முருகேசன், பாலமுருகன், ராமர், முத்தழகு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நகர செயலாளர் சேது, ராமசுப்பு, ரவீந்திரன், வண்டிமலையான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story