கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு ஏற்பாடுகள்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் - கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது


கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு ஏற்பாடுகள்: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் - கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது
x
தினத்தந்தி 20 Sept 2020 5:00 AM IST (Updated: 20 Sept 2020 3:42 AM IST)
t-max-icont-min-icon

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு ஏற்பாடுகளுடன் கர்நாடக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது. இதில் கொரோனா மருத்துவ உபகரண கொள்முதல் முறைகேடு, போதைப் பொருள் விவகாரம் உள்பட பல பிரச்சினைகளை எழுப்பி புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் தினமும் சராசரியாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூன் மாதம் நடக்க இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக ஜூன் மாதம் மழைக் கால கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை. கொரோனா காரணமாக பெங்களூரு விதானசவுதாவில் மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவதா? அல்லது வேறு இடத்தில் கூட்டத்தொடரை நடத்துவதா? என்பது குறித்து மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

சபாநாயகர் விஸ்வேசுவர ஹெக்டே காகேரியும், முதல்-மந்திரி எடியூரப்பாவும் கூட்டத்தொடரை எங்கு நடத்தலாம் என்பது குறித்து ஆலோசித்தனர். இறுதியில் கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், கொரோனாவுக்கு முன்எச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டும் பெங்களூரு விதானசவுதாவிலேயே மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவது என்று மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. சபாநாயகர் விஸ்வேசுவர ஹெக்டே காகேரியும் விதானசவுதாவில் மழைக்கால கூட்டத்தொடரை நடத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 21-ந் தேதி யில் (நாளை) இருந்து 30-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான அனைத்து பணிகளும் பெங்களூரு விதானசவுதாவில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு, முதல்-மந்திரி எடியூரப்பாவை மாற்ற முடிவு உள்ளிட்ட பரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) பெங்களூரு விதானசவுதாவில் கூடுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சட்டசபை செயலாளர் மகாலட்சுமி தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

கொரோனா காரணமாக சட்டசபையிலும், மேல்சபையிலும் உறுப்பினர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து கொள்வதற்கு வசதியாக இருக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், கொரோனா பரிசோதனையில் பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வரும் உறுப்பினர்களுக்கு உடல் வெப்பத்தை அறிய பரிசோதனை நடத்தப்படும். மேலும் உறுப்பினர்கள் அமருவதற்கு இருக்கைகள் சமூக இடைவெளி விட்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக நாளை கூட்டத்தொடர் தொடங்குவதால் 72 மணிநேரத்திற்கு முன்பாக உறுப்பினர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று செயலாளர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார். அதன்படி, சபாநாயகர் விஸ்வேசுவர ஹெக்டே காவேரி கொரோனா பரிசோதனை மேற்கொண்டு இருக்கிறார். உறுப்பினர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள விதானசவுதாவிலேயே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மந்திரிகள் பசவராஜ் பொம்மை, சசிகலா ஜோலே, கோபாலய்யா, பைரதி பசவராஜ் உள்ளிட்டோர் கொரோனா பாதிப்பு இருப்பதால், அவர்கள் கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிகிறது.

இந்த நிலையில், சட்டசபை கூட்டத்தொடரில் அரசுக்கு எதிராக பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். மேலும் கூட்டத்தொடரில் அரசுக்கு எதிராக பிரச்சினைகளை கிளப்புவோம் என்று சித்தராமையா தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சரியான நிவாரணம் வழங்கவில்லை என்ற பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது. மேலும் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை வழங்காமல் இருப்பது, மழை நிவாரண பணிகளை மேற்கொள்ள நிவாரண நிதி வழங்காமல் இருக்கும் பிரச்சினையை எழுப்பவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக பெங்களூரு டி.ஜே.ஹள்ளி வன்முறை விவகாரம், போதைப்பொருள் விவகாரத்திலும் பிரச்சினை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது.

அத்துடன் கொரோனா உபகரணங்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு கூறி இருந்தார். இந்த பிரச்சினையை மீண்டும் சட்டசபையில் எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும், ஏ.பி.எம்.சி. மற்றும் நிலச்சீர்திருத்த சட்ட திருத்தம் குறித்த பிரச்சினையை எழுப்பி அரசை இக்கட்டில் சிக்க வைக்கவும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கவும் முதல்-மந்திரி எடியூரப்பா தயாராகி வருகிறார். இதுதொடர்பாக மந்திரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்த தீர்மானித்துள்ளார்.

இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் நாளை முதல் வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுவதையொட்டி பெங்களூரு விதானசவுதாவை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக விதானசவுதாவை சுற்றி 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற அனுமதி இல்லை.

Next Story