புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சிறப்பு தரிசனம் - பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்


புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சிறப்பு தரிசனம் - பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்
x
தினத்தந்தி 20 Sep 2020 12:03 AM GMT (Updated: 20 Sep 2020 12:03 AM GMT)

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி நேற்று திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள பழமைவாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் ஸ்ரீ தேவி பூதேவி சமேத வீரராகவ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நேற்று பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவில் வளாகம் முன்பு திரண்டனர்.

அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, கோவில் நுழைவு வாயில் முன்பு கோவில் ஊழியர்கள் மூலம் பக்தர்களுக்கு வெப்பமானி உதவியுடன் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பூ மாலை, தேங்காய், கற்பூரம் ஆகியவை கோவிலுக்கு கொண்டு வர கோவில் நிர்வாகம் தடைசெய்துள்ளது. அதைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் உரிய சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து, அனைவரும் முக கவசம் அணிந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.

Next Story