ஜெயங்கொண்டத்தில் விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு


ஜெயங்கொண்டத்தில் விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Sep 2020 1:13 AM GMT (Updated: 20 Sep 2020 1:13 AM GMT)

ஜெயங்கொண்டத்தில் விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் அருகே அண்ணா சிலை பின்புறம் ஆவேரி கரையில் ஆபத்து காத்த விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜையை முடித்து விட்டு கோவில் அர்ச்சகர் ஹரிஹரன் கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். நேற்று காலை 8 மணி அளவில் கோவிலை திறந்து பூஜை செய்து முடித்து வெளியே வந்துள்ளார்.

அப்போது வெளி கேட் அருகே உள்ள உண்டியல் துளையிடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கோவில் நிர்வாக அலுவலர் செல்வத்திடம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் செல்வம் மற்றும் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மர்ம நபர் கேமராவை மறுபக்கம் திருப்பி வைத்துவிட்டு உண்டியலை கடப்பாறையால் குத்தி உள்ளே கைவிட்டு பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

உண்டியல் பணம் திருட்டு

இந்தக் கோவிலில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு உண்டியல் இந்து சமய அறநிலையத் துறையால் திறக்கப்பட்டு ரூ.ஒரு லட்சத்து 16 ஆயிரம் எடுக்கப்பட்டது. தற்போது உண்டியல் பூட்டைஉடைத்தால் அலாரம் அடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் பூட்டை உடைக்காமல், அதற்கு மறுபுறம் உண்டியலை கடப்பாறையால் குத்தி துளையிட்டு பணத்தை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கோவிலில் உள்ள 4 கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஒரு கேமராவில் மர்ம நபர் கடப்பாறையுடன் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த காட்சியை வைத்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Next Story