தஞ்சை என்ஜினீயரை தொடர்ந்து நீடாமங்கலம் ஸ்டூடியோ உரிமையாளருக்கும் பார்சலில் வெடிபொருட்கள் போலீசார் விசாரணை


தஞ்சை என்ஜினீயரை தொடர்ந்து நீடாமங்கலம் ஸ்டூடியோ உரிமையாளருக்கும் பார்சலில் வெடிபொருட்கள் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 20 Sep 2020 2:08 AM GMT (Updated: 20 Sep 2020 2:08 AM GMT)

தஞ்சை என்ஜினீயரை தொடர்ந்து நீடாமங்கலத்தை சேர்ந்த ஸ்டூடியோ உரிமையாளருக்கும் பார்சலில் வெடி பொருட்கள் வந்திருந்ததை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நீடாமங்கலம்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி மேலையூர் வடக்கு தெருவை சேர்ந்த என்ஜினீயர் அறிவழகன்(வயது 28) என்பவருக்கு கொரியரில் ஒரு பார்சல் வந்தது. அதில் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் இருந்தன. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கொரியர் மூலமாக வெடிபொருட்கள் அடங்கிய பார்சல் அனுப்பப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கொரியர் அலுவலகங்களை போலீசார் தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்தனர். நீடாமங்கலத்துக்கு வரும் பார்சல்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

ஸ்டூடியோ உரிமையாளருக்கும்...

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் புதுத்தெருவில் வசித்து வரும் போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் வீரக்குமார்(40) என்பவருக்கு திருச்சியில் இருந்து கொரியரில் நேற்று முன்தினம் மாலை ஒரு பார்சல் வந்திருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கொரியர் அலுவலகத்துக்கு சென்று விசாரித்தனர்.

இதில் திருச்சி தென்னூர் ஹைரோடு 10.சி.வெள்ளாளத்தெரு சி.கார்த்திரப்பன் என்ற முகவரியில் இருந்து பார்சல் வந்திருப்பது தெரிய வந்தது. தஞ்சை என்ஜினீயருக்கு வந்த அதே முகவரியில் இருந்து வீரக்குமாருக்கும் பார்சல் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் வீரக்குமாரை அழைத்து பார்சலை பிரிக்க வேண்டாம் என அறிவுறுத்தினர். பின்னர் கியூ பிரிவு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பார்சலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஜெலட்டின் குச்சி-டெட்டனேட்டர்

வெடிகுண்டு நிபுணர்கள் பார்சலை பிரித்து பார்த்தபோது, அதில் பேட்டரி மற்றும் மின் இணைப்பில் வெடிக்கக்கூடிய ஒரு ஜெலட்டின் குச்சி, 125 கிராம் எடை கொண்ட டெட்டனேட்டர் ஆகியவை இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் மணல் நிரப்பிய பிளாஸ்டிக் வாளியில் வைத்தனர்.

இந்த மாதிரியான வெடி பொருட்கள் மிகப்பெரிய மலையை பிளப்பதற்கு பயன்படுத்தப்படுபவை என்றும், பெரிய கட்டிடங்கள், வாகனங்களை தகர்க்கும் சக்தி கொண்டவை என்றும் போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வீரக்குமாரிடம் விசாரணை நடத்தினர்.

நிதி நிறுவனம் மீது சந்தேகம்

அவர், தனக்கும் அந்த பார்சலுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், திருச்சியில் உள்ள ஒரு நிதி நிறுவனம் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் போலீசாரிடம் வீரக்குமார் தெரிவித்தார். இதுகுறித்து வீரக்குமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பார்சல் வந்தது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2017-ம் ஆண்டு திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் முதலீடு செய்திருந்தேன். அந்த தொகையை மோசடி செய்து விட்டதாக நிதி நிறுவனம் மீது திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த ஆண்டு(2019) மார்ச் மாதம் புகார் அளித்தேன். இந்த புகாரை வாபஸ் பெறும்படி பல்வேறு விதமான மிரட்டல்கள் வந்தன. மேலும் அவர்கள் என்னை அச்சுறுத்துவதற்காக வெடி பொருட்களை பார்சலில் அனுப்பி இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த என்ஜினீயரை தொடர்ந்து நீடாமங்கலம் ஸ்டூடியோ உரிமையாளருக்கும் பார்சலில் வெடிபொருட்கள் வந்திருப்பதால் ஒரே நபர் இதில் சம்மந்தப்பட்டு இருக்கலாமா? என்பது குறித்து உளவுப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story